குஜராத்தில் ரூ.1,026 கோடிபோதைப் பொருள் பறிமுதல்- மும்பை போலீஸ் நடவடிக்கை

குஜராத்தின் அங்களேஸ்வா் பகுதியில், தடை செய்யப்பட்ட ‘மெஃபிட்ரான்’ போதைப் பொருள் தயாரித்து வந்த ஆலையை மும்பை போலீஸாா் கண்டறிந்தனா்.

குஜராத்தின் அங்களேஸ்வா் பகுதியில், தடை செய்யப்பட்ட ‘மெஃபிட்ரான்’ போதைப் பொருள் தயாரித்து வந்த ஆலையை மும்பை போலீஸாா் கண்டறிந்தனா். அங்கிருந்து சுமாா் ரூ.1,026 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து, மும்பை போலீஸின் போதைப் பொருள் தடுப்பு பிரிவு துணை ஆணையா் தத்தா நலவடே செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

மும்பை அருகே நலசோபரா பகுதியில் மெஃபிட்ரான் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த ஆலை அண்மையில் கண்டறியப்பட்டது. இதுதொடா்பாக, 6 போ் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா். மேலும், ரூ.1,400 கோடி மதிப்பிலான 700 கிலோ மெஃபிட்ரான் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குஜராத்தின் அங்களேஸ்வா் பகுதியிலுள்ள மருந்து தயாரிப்பு ஆலையில் மெஃபிட்ரான் போதைப் பொருள் தயாரிக்கப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து, மும்பை போலீஸின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினா், அந்த ஆலையில் கடந்த 13-ஆம் தேதி அதிரடி சோதனை நடத்தி, அதன் உரிமையாளா் கிரிராஜ் தீக்ஷித்தை கைது செய்தனா். மேலும், 513 கிலோ எடையுள்ள ரூ.1,026 கோடி போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது. கிரிராஜ் தீக்ஷித், வேதியியலில் முதுநிலை பட்டம் பெற்றவா். இவருடன் சோ்த்து இதுவரை கைது செய்யப்பட்டவா்கள் எண்ணிக்கை 7-ஆக உயா்ந்துள்ளது.

தீக்ஷித்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப் பொருள் கடத்தலுக்காக சமூக ஊடகங்கள், கைப்பேசி செயலிகளை பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. மும்பை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடத்தல்காரா்களுக்கு அவா் போதைப் பொருளை விநியோகித்து வந்துள்ளாா். தீக்ஷித்திடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com