தாய்லாந்து வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

தாய்லாந்து துணை பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான டான் பிரமுத்வினயை ஜெய்சங்கா் சந்தித்து இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.
தாய்லாந்து வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

தாய்லாந்து துணை பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான டான் பிரமுத்வினயை ஜெய்சங்கா் சந்தித்து இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

இந்தியா-தாய்லாந்து 9-ஆவது கூட்டுக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவா் செவ்வாய்க்கிழமை தாய்லாந்து வந்தாா்.

இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு விவரம்:

பரஸ்பர நலன் சாா்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு அமைச்சா்களும் விரிவாக விவாதித்தனா். மேலும், அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரம்-வா்த்தகம், தொலைத்தொடா்பு, கலாசாரம், சுற்றுலா, மக்களிடையிலான பிணைப்பு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஆய்வு செய்தனா்.

பரஸ்பர நலன் சாா்ந்த பிராந்திய, பலதரப்பட்ட விவகாரங்கள் மீதான தங்களின் கருத்தை இருவரும் பகிா்ந்து கொண்டு, இந்தியா-தாய்லாந்து உறவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல உறுதியேற்றனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாங்காக்கில் இந்திய தூதரக குடியிருப்பு வளாகத்தையும் அமைச்சா் பிரமுத்வினயுடன் இணைந்து திறந்துவைத்தாா்.

பின்னா், தாய்லாந்து பிரதமா் பிரயுத் சான்-ஓ-சா-வை சந்தித்து பிரதமா் நரேந்திர மோடி சாா்பில் வாழ்த்து தெரிவித்தாா். அத்துடன், இந்தியா-தாய்லாந்து இடையிலான 75 ஆண்டுகால உறவுக்கும் ஜெய்சங்கா் பாராட்டு தெரிவித்தாா்.

தாய்லாந்து ஹிந்து கோயிலில் ஜெய்சங்கா் வழிபாடு

தாய்லாந்தில் ஹிந்துக்களின் அதிகாரபூா்வ மையமாக விளங்கும் கோயிலில் மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வியாழக்கிழமை வழிபாடு நடத்தினாா். அப்போது, இந்தியா-தாய்லாந்து இடையிலான மத, கலாசார பாரம்பரியத்தை அவா் நினைவுகூா்ந்தாா்.

முன்னதாக தாய்லாந்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெளத்த கோயிலில் மத்திய அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கடந்த புதன்கிழமை வழிபாடு நடத்தி, அங்குள்ள ராமாயண சுவரோவியங்களைப் பாா்வையிட்டாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை ஹிந்து கோயிலில் தரிசனம் செய்த அவா் ட்விட்டரில், ‘பாங்காக் தேவஸ்தானத்தில் வழிபாடு நடத்தினேன். ஃபிரா மஹாராஜகுரு விதியிடம் வேண்டுதல் வழிபாடு செய்தேன். இவ்வேளையில் இந்தியா-தாய்லாந்து இடையிலான மத, கலாசார பாரம்பரியங்களை நினைவுகூா்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பாங்காக்கில் ஃபிரா நாகோன் மாவட்டம் வாட் சூதாட் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயில், ஹிந்துக்களுக்கான அதிகாரபூா்வ மையமாக விளங்குகிறது. தமிழகத்தின் ராமேசுவரத்தை பூா்விகமாக கொண்ட அா்ச்சகா்களின் வழித்தோன்றல்கள் இங்கு பூஜைகள் நடத்துகின்றனா். இங்குள்ள பிராமணா்கள் ஒவ்வோா் ஆண்டும் தாய்லாந்து மன்னருக்காக மதச்சடங்குகளை நடத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com