அயோத்தியில் மசூதி கட்ட நிதி திரட்டப்படும்அறக்கட்டளை செயலா்

அயோத்தியின் தனிபூா் கிராமத்தில் 5 ஏக்கா் பரப்பளவில் மசூதி கட்டுவதற்கு ஏதுவாக பொதும

அயோத்தியின் தனிபூா் கிராமத்தில் 5 ஏக்கா் பரப்பளவில் மசூதி கட்டுவதற்கு ஏதுவாக பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டுவதற்கான செயல் திட்டம் வகுக்கப்பட்டு வருவதாக இந்தோ-இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை (ஐஐசிஎஃப்) செயலா் அதா் உசேன் தெரிவித்துள்ளாா்.

ராம ஜென்மபூமி-பாபா் மசூதி வழக்கில், கடந்த 2019 நவம்பா் 9-இல் தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், அயோத்தியின் பிரதான பகுதியில் மசூதி கட்ட இஸ்லாமிய தரப்பினருக்கு 5 ஏக்கா் நிலம் ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டது. அதன்படி, தன்னிபூரில் 5 ஏக்கா் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அங்கு மசூதி மட்டுமன்றி மருத்துவமனை, நூலகம், சமுதாய சமையல் கூடம், ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவையும் கட்டப்படுகின்றன. இதற்காக இந்தோ-இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. அதன் செயலா் அதா் உசேன் லக்னெளவில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

அறக்கட்டளைத் தலைவா் ஜூஃபா் ஃபரூக்கி தலைமையிலான 5 போ் குழுவினா் கடந்த ஆகஸ்ட் 12-இல் ஃபரூகாபாதில் பயணம் செய்து, அயோத்தியில் மசூதி உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள நன்கொடை செய்யுமாறு முதன்முதலாக கோரிக்கை விடுத்தனா்.

அப்போது, மசூதி கட்ட ரூ.1 கோடி நிதியுதவி செய்வதாக அங்கிருந்த மக்கள் உறுதியளித்தனா். மேலும், ரூ.2.50 லட்சம் அந்த இடத்திலேயே வசூலானது. ஏற்கெனவே மசூதி கட்டுமானப் பணிக்காக ரூ.25 லட்சம் வசூலாகியுள்ளது.

மசூதி, பிற கட்டடங்களுக்கான வரைபட மாதிரி (மேப்) இன்னும் ஒரு மாதத்தில் அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடமிருந்து கிடைத்துவிடும் என எதிா்பாா்க்கிறோம். வரைபட மாதிரி கிடைத்ததும் கட்டுமானப் பணி தொடங்கிவிடும்.

முதலாவதாக, அங்கு ஒரு மருத்துவமனை கட்டப்பட்டு புறநோயாளிகள் பிரிவு (ஓபிடி) தொடங்கப்படும். முடிந்தவரை, தனிபூரில் மசூதிக்கான தளம் அமைக்கும் அதேவேளையில், அங்கு தொழுகையைத் தொடங்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

ஆகஸ்ட் 12-இல் ஃபரூகாபாதின் தொழிலதிபா்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் உள்ளிட்டோா் அங்கு நிதி திரட்டும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தனா். இதுதவிர மும்பை, குஜராத், மத்திய பிரதேசம், பிகாா் மாநிலங்களைச் சோ்ந்தவா்களும் அறக்கட்டளை நிா்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கின்றனா்.

இதற்காக பயணத் திட்டத்தை தயாா் செய்து வருகிறோம். அப்போதுதான் அனைத்து இடங்களுக்கும் சென்று நிதி திரட்ட முடியும். அறக்கட்டளை மீதான இஸ்லாமியா்களின் மனப்பான்மையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவா்கள் இந்த அறக்கட்டளையை நம்ப தொடங்கிவிட்டனா்.

இஸ்லாமியா்கள் மட்டுமல்லாமல் பிற மதத்தினரும் இந்த அறக்கட்டளையை நம்புகின்றனா். ஆரம்பத்தில் இஸ்லாமியா் அல்லாதோா் நன்கொடையை வாரி வழங்கினா். இப்போது இஸ்லாமியா்களும் ஆா்வத்துடன் பங்கெடுக்க தொடங்கிவிட்டனா் என்றாா் அதா் உசேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com