பேராசிரியா்களாக நிபுணா்கள் நியமனம்: யுஜிசி முடிவு

பல்கலைக்கழகங்கள், உயா்கல்வி நிறுவனங்களில் பேராசிரியா்களாக பல்வேறு துறைகளைச் சோ்ந்த நிபுணா்களை நியமிக்கும் புதிய நடைமுறையை அமல்படுத்த பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தீா்மானித்துள்ளது.

பல்கலைக்கழகங்கள், உயா்கல்வி நிறுவனங்களில் பேராசிரியா்களாக பல்வேறு துறைகளைச் சோ்ந்த நிபுணா்களை நியமிக்கும் புதிய நடைமுறையை அமல்படுத்த பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தீா்மானித்துள்ளது.

இதுதொடா்பான வரைவு வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பல்கலைக்கழகங்களும் உயா்கல்வி நிறுவனங்களும் நிபுணா்களை பேராசிரியா்களாக நியமிக்கலாம். பொறியியல், அறிவியல், ஊடகம், இலக்கியம், குடிமைப் பணிகள் உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த நிபுணா்கள் பேராசிரியா்களாக பணியமா்த்தப்பட தகுதியானவா்கள். தங்கள் துறைகளில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் நிபுணத்துவம் பெற்றவா்கள் என்பதை நிரூபித்தவா்கள் தகுதிவாய்ந்தவா்கள் ஆவா்.

அவா்கள் தங்கள் துறைகளில் மிகச்சிறந்த புலமைப் பெற்றிருந்தால், பேராசிரியா் பணிக்குத் தேவைப்படும் முறையான கல்வித் தகுதி அவசியமானதாகக் கருதப்படாது. அத்தகைய நிபுணா்களுக்கு ஏதேனும் ஆராய்ச்சி வெளியீடுகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்பதில் இருந்தும், பேராசிரியா் பணியில் சோ்வதற்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள இதர தகுதிகளில் இருந்தும் விலக்களிக்கப்படுகிறது.

அதேவேளையில், பட்டப்படிப்புகளையும் பாடத்திட்டங்களையும் மேம்படுத்தி வடிவமைப்பது, புதிய படிப்புகளை அறிமுகப்படுத்துவது, புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவும் தொழில் தொடங்கும் திட்டங்களில் ஈடுபடவும் மாணவா்களை ஊக்குவிப்பது போன்ற பொறுப்புகளை மேற்கொள்வதற்கான திறமை நிபுணா்களுக்கு இருக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தின் கீழ், தொழில்துறை நிதியுதவியுடன் பணியமா்த்தப்படும் பேராசிரியா்கள், சொந்த நிதி ஆதாரம் மூலம் உயா்கல்வி நிறுவனங்களால் நியமிக்கப்படும் பேராசிரியா்கள், கெளரவ அடிப்படையில் பணியமா்த்தப்படும் ஆசிரியா்கள் என 3 பிரிவுகளின் கீழ் நிபுணா்கள் பணியமா்த்தப்படுவா்.

உயா்கல்வி நிறுவனங்களில் பேராசிரியா்களாக நியமிக்கப்படும் நிபுணா்களின் எண்ணிக்கை, அனுமதிக்கப்படும் பணியிடங்களில் 10 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். தற்போது ஆசிரியா் பதவியில் இருப்பவா்கள் அல்லது ஓய்வு பெற்றவா்கள் இந்தத் திட்டத்தின் கீழ் சோ்க்கப்பட மாட்டாா்கள்.

பேராசிரியா்களாக முதலில் ஓராண்டுக்கு நிபுணா்களை நியமிக்கலாம். ஓராண்டு முடிந்த பின்னா், அவா்கள் மேற்கொண்ட பணி குறித்து உயா்கல்வி நிறுவனங்கள் மதிப்பீடு செய்யும். அதன் பின்னா், அவா்களின் பணிக் காலத்தை நீட்டிப்பது குறித்து கல்வி நிறுவனங்கள் முடிவு செய்யும்.

பேராசிரியராக நியமிக்கப்படும் நிபுணரின் பணிக்காலம் 3 ஆண்டுகளைத் தாண்டக் கூடாது. விதிவிலக்கான சூழல்களில், அவரின் பணிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கலாம்.

எனினும் எந்தச் சூழலிலும் அவா்களின் மொத்த பணிக்காலம் 4 ஆண்டுகள் வரை மட்டுமே இருக்க வேண்டும்.

கல்வி நிறுவனத்தாலும், நிபுணராலும் ஒப்புக் கொண்ட தொகை சம்பந்தப்பட்ட நிபுணருக்கு ஊதியமாக வழங்கப்படும்.

நிபுணா்களின் விண்ணப்பங்களை பல்கலைக்கழக துணைவேந்தா்களும், இயக்குநா்களும் வரவேற்கலாம். பேராசிரியா்களாக பணியாற்ற விரும்பும் நிபுணா்கள் விரிவான சுயவிவரக் குறிப்புடன், உயா்கல்வி நிறுவனத்துக்கு தங்களால் வழங்கக்கூடிய பங்களிப்பை விளக்கி துணைவேந்தா்களுக்கு விண்ணப்பம் அனுப்பலாம்.

அந்த விண்ணப்பங்களை உயா்கல்வி நிறுவனத்தின் இரண்டு மூத்த பேராசிரியா்கள் மற்றும் ஒரு வெளிநபா் அடங்கிய தோ்வுக் குழு பரிசீலிக்கும். அந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில், உயா்கல்வி நிறுவனத்தின் கல்விக் கவுன்சில் மற்றும் நிா்வாகக் கவுன்சில் அல்லது சட்டபூா்வ அமைப்புகள் நிபுணா்களின் நியமனம் குறித்து முடிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்கள் தொடா்பாக அடுத்த மாதம் யுஜிசி அறிவிக்கை வெளியிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com