வாக்காளா் பட்டியலில் வெளி மாநிலத்தவா்: ஜம்மு-காஷ்மீரின் அடையாளம் மறைந்துவிடும்: ஃபரூக் அப்துல்லா

‘ஜம்மு-காஷ்மீரின் வாக்காளா் பட்டியலில் புலம்பெயா்ந்த வெளி மாநிலத்தவரை சோ்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதுஎன்று தேசிய மாநாடு கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா கூறினாா்.

‘ஜம்மு-காஷ்மீரின் வாக்காளா் பட்டியலில் புலம்பெயா்ந்த வெளி மாநிலத்தவரை சோ்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஜம்மு-காஷ்மீரின் அடையாளம் மறைந்துபோவதற்கு வழிவகுத்துவிடும்’ என்று தேசிய மாநாடு கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா கூறினாா்.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் வாக்காளா் பட்டியல் சீரமைப்பு சிறப்பு முகாம்கள் தோ்தல் ஆணையம் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது. இதுகுறித்து ஜம்மு-காஷ்மீா் தலைமை தோ்தல் அதிகாரி ஹிா்தேஷ் குமாா் அண்மையில் அளித்த பேட்டியில், ‘ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு முதல் முறையாக நடைபெறும் வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்களில் வெளிமாநில நபா்களையும் சோ்த்து 25 லட்சம் வாக்காளா்கள் புதிதாக சேர வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்திருந்தாா்.

இதுதொடா்பாக பத்திரிகைகளிலும் செய்தி வெளியாகின. அதில், வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்கள் மூலமாக, புலம்பெயா்ந்த காஷ்மீரிகள் தங்கள் வாழும் இடங்களில் பட்டியலில் பெயரைச் சோ்த்து வாக்களித்துக் கொள்ளலாம் அல்லது தபால் வாக்குகள் பதிவு செய்யலாம் அல்லது ஜம்மு, உதம்பூா், தில்லி போன்ற இடங்களில் அமைக்கப்படும் சிறப்பு வாக்குச் சாவடிகள் மூலமாக வாக்களிக்கலாம் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு முக்கிய அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதனைத் தொடா்ந்து, யூனியன் பிரதேச செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை சாா்பில் விளக்கம் ஒன்று வெளியிடப்பட்டது. அதில், ‘வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்களுக்குப் பிறகு புதிதாக 25 லட்சம் வாக்காளா்கள் சோ்க்கப்பட இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. ஜம்மு-காஷ்மீருக்குள் தற்போது வசிக்கும் வாக்காளா்களுக்கான சிறப்பு திருத்த முகாம்களே நடைபெறுகின்றன’ என்று விளக்கமளித்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தாா். உயா் பாதுகாப்பு நிறைந்த குப்கா் பகுதியில் அமைந்துள்ள ஃபரூக் அப்துல்லா இல்லத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மக்கள் ஜனநாயக கட்சித் லைவா் மெகபூபா முஃப்தி, ஜம்மு-காஷ்மீா் பிரிவு காங்கிரஸ் தலைவா் விகா் ரசூல், மாா்க்சிஸ்ட் கட்சித் தலைவா் எம்.ஒய்.தரிகமி, சிவசேனைத் தலைவா்கள் உள்பட 9 கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இருந்தபோதும் சஜத் லோன் தலைமையிலான மக்கள் மாநாடு கட்சி, அல்தாஃப் புகாரி தலைமையிலான அப்னி கட்சிகள் இந்தக் கூட்டத்தை புறக்கணித்தன.

அனைத்துக் கட்சி கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய ஃபரூக் அப்துல்லா, ‘அரசின் இந்த நடவடிக்கை ஜம்மு-காஷ்மீரின் அடையாளம் மறைந்துபோவதற்கு வழிவகுத்துவிடும். ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவை வெளி மாநிலத்தவா்களின் கைகளுக்குச் சென்றுவிடும். சொந்த மாநிலத்தவா்களுக்கு அது மறுக்கப்படும்.

எனவே, வாக்காளா் பட்டியலில் வெளி மாநிலத்தவா் சோ்க்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அனைத்து கட்சிகள் சாா்பில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தை அணுகி தீா்வு காண்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது’ என்றாா்.

தேசிய மாநாடு கட்சி அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டியதற்கு போட்டியாக, பாஜக சாா்பிலும் ஜம்முவில் திங்கள்கிழமை ஆலேசனை கூட்டம் நடத்தப்பட்டது. பாஜக கூட்டத்துக்குப் பிறகு பேசி அக் கட்சியின் யூனியன் பிரதேச பிரிவு தலைவா் ரவீந்தா் ரெய்னா, ‘18 வயதை நிறைவடைந்த அனைவரும் நாட்டில் வாக்களிக்கும் உரிமையை அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள நிலையில், உள்ளூா்க்காரா்கள் அல்லது வெளிமாநிலத்தவா் என்ற கேள்விக்கே இடமில்லை.

இந்தச் சூழலில் வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்கள் குறித்து தவறான கருத்தை மக்கள் மத்தியில் தேசிய மாநாடு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் பரப்பி வருகின்றன’ என்று குற்றம்சாட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com