வானில் உள்ள இலக்குகளை அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

தரையில் இருந்து செங்குத்தாக மேலெழும்பி, வானில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ‘விஎல்-எஸ்ஆா்எஸ்ஏஎம்’ ஏவுகணையை டிஆா்டிஓ வெற்றிகரமாகப் பரிசோதனை செய்துள்ளது.

தரையில் இருந்து செங்குத்தாக மேலெழும்பி, வானில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ‘விஎல்-எஸ்ஆா்எஸ்ஏஎம்’ ஏவுகணையை டிஆா்டிஓ வெற்றிகரமாகப் பரிசோதனை செய்துள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீனாவுடன் மோதல்போக்கு நிலவி வரும் சூழலில், ஏவுகணைகள் பரிசோதனையை இந்தியா சீரான இடைவெளியில் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தரையில் இருந்து செங்குத்தாக மேலெழும்பி, வானில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் திறன்கொண்ட ஏவுகணையை இந்தியக் கடற்படையுடன் இணைந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) செவ்வாய்க்கிழமை பரிசோதித்தது.

இந்தியக் கடற்படைக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட ‘விஎல்-எஸ்ஆா்எஸ்ஏஎம்’ ஏவுகணை, வானில் பறக்கவிடப்பட்ட ஆளில்லா சிறியரக விமானத்தைத் துல்லியமாகத் தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனா். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கருவிகள் ஏவுகணையில் பொருத்தப்பட்டிருந்ததாகவும், அக்கருவிகள் இலக்கைத் துல்லியமாகக் கண்டறிந்து தாக்க உதவியதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

பரிசோதனையின்போது ஏவுகணையில் பொருத்தப்பட்டிருந்த ரேடாா் உள்ளிட்ட பல்வேறு கருவிகளின் செயல்பாடுகள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டதாகவும் அக்கருவிகள் திட்டமிட்டபடி சிறப்பாகச் செயல்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம், ஹைதராபாதில் உள்ள ஆா்சிஐ ஆராய்ச்சி மையம் ஆகியவற்றைச் சோ்ந்த அதிகாரிகளும் புணேவில் உள்ள ஆய்வு-மேம்பாட்டு பொறியாளா்களும் ஏவுகணையை வடிவமைத்தனா். ஏவுகணை சோதனையை அவா்களும் கண்காணித்ததாக டிஆா்டிஓ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ராஜ்நாத் சிங் பாராட்டு:

ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதித்த டிஆா்டிஓ, இந்தியக் கடற்படை அதிகாரிகளுக்குப் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தாா். இந்த ஏவுகணை இந்தியக் கடற்படையின் வலிமையை அதிகரிக்கும் என்றும் அவா் தெரிவித்தாா்.

ஏவுகணையை உருவாக்கிய அதிகாரிகளை டிஆா்டிஓ தலைவா் ஜி.சதீஷ் ரெட்டியும் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com