என்டிடிவி-யை கையகப்படுத்துவாரா அதானி?

ஊடக உலகில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருவது, இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி மற்றும் எண்ம செய்தி வெளியீட்டு நிறுவனங்களில் ஒன்றான என்டிடிவி-யைக் கைப்பற்றும் முயற்சியில் நாட்டின் மிகப் பெரிய 
என்டிடிவி-யை கையகப்படுத்துவாரா அதானி?

ஊடக உலகில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருவது, இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி மற்றும் எண்ம செய்தி வெளியீட்டு நிறுவனங்களில் ஒன்றான என்டிடிவி-யைக் கைப்பற்றும் முயற்சியில் நாட்டின் மிகப் பெரிய பணக்காரர் கெளதம் அதானி இறங்கியிருக்கும் விவகாரம்தான்.
நரேந்திர மோடி தலைமையிலான ஆளும் கட்சிக்கு எதிரான செய்திகளையும், கருத்துகளையும் தெரிவித்து வரும் மிகச் சில தேசிய ஊடகங்களில் என்டிடிவி-யும் ஒன்று என்று கூறப்படுகிறது.
அதேவேளையில், அந்தத் தொலைக்காட்சி தேசத்துக்கும், ஹிந்து மதத்துக்கும் எதிரான கருத்துகளை வெளியிட்டு வருவதாக பாஜக ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்தச் சூழலில்தான், பிரதமர் நரேந்திர மோடிக்கு மிக நெருக்கமானவராக அறியப்படும் கெளதம் அதானியின் அதானி குழுமம், என்டிடிவி நிறுவனத்தின் 29.18 சதவீத பங்குகளை மறைமுகமாக கையகப்படுத்தியுள்ளதுடன், மேலும் 26 சதவீத பங்குகளை தங்களுக்கு விற்பனை செய்ய பங்குதாரர்களுக்கு செவ்வாய்க்கிழமை வெளிப்படையான அழைப்பை விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்டிடிவி-யை நிறுவிய மூத்த செய்தியாளர்களான ராதிகா மற்றும் பிரணாய் ராய் தம்பதியின் சம்மதம் இல்லாமலேயே - இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்குத் தெரியாமலேயே- நிறுவனத்தின் கணிசமான பங்குகள் அதானி குழுமத்துக்கு கைமாறியிருக்கின்றன.
இத்தனைக்கும், பிரதமரின் நெருங்கிய நண்பர் என்று எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்படும் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமாக இருந்த ஒரு நிறுவனத்தை கையகப்படுத்தியதன் மூலம்தான், என்டிடிவியின் 29.18 சதவீத பங்குகளை அதானி குழுமம் வாங்கியிருக்கிறது.
தற்போது மேலும் 26 சதவீத பங்குகளை வாங்குவதன் மூலம், என்டிடிவி நிறுவனத்தின் முழு கட்டுப்பாட்டையும் அதானி கைப்பற்றிவிட முடியும்.
தற்போதுள்ள சூழலில், அதானி குழுமத்தைவிட ராய் தம்பதியிடம்தான் அதிகமாக என்டிடிவியின் 32.27 சதவீத பங்குகள் உள்ளன. அதானியிடம்
29.18 சதவீத பங்குகள் மட்டுமே உள்ளன.
ஆனால், அதானி குழுமம் 26 சதவீத பங்குகளை தங்களிடம் விற்பனை செய்ய என்டிடிவி பங்குதாரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அவர்களில் சிலர் தங்களது பங்குகளை அதானி குழுமத்துக்கு விற்பனை செய்யலாம்.
ஏற்கெனவே, அதானி நிறுவனங்களில் ஏராளமாக பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டு நிறுவனமான எல்டிஎஸ் இன்வெஸ்ட்மென்ட், என்டிடிவி-யில் 9.75 சதவீத பங்குகளை கைவசம் வைத்துள்ளது. இது தவிர, மேலும் 4 முதலீட்டு நிறுவனங்கள் வசம் ஒட்டுமொத்தமாக என்டிடிவி-யின் 7.11 சதவீத பங்குகள் உள்ளன. இந்த நிறுவனங்கள் தங்களது என்டிடிவி பங்குகளை அதானி குழுமத்துக்கு விற்பனை செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்த வகையில், அதானி குழுமத்தின் அழைப்பை ஏற்று கணிசமான என்டிடிவி பங்குதாரர்கள் தங்களது பங்குகளை குழுமத்துக்கு விற்பனை செய்தால், என்டிடிவி-யை கெளதம் அதானி எளிதில் கையகப்படுத்துவார் என்று சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

ரிலையன்ஸிடமிருந்து அதானியிடம்...
மூத்த செய்தியாளர்களான பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் தம்பதியால் 38 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட என்டிடிவி, தற்போது அதானி குழுமத்தின் கைகளுக்குச் செல்வதற்கான அச்சாரம் 2009-ஆம் ஆண்டிலேயே போடப்பட்டுவிட்டது.
அந்த ஆண்டில்தான், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய விஸ்வபிரதான் கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட் என்ற "ஷெல்' நிறுவனம், ராதிகா ராய், பிரணாய் ராய் பிரைவேட் லிமிடெட்டுக்கு ரூ.403.85 கோடி பிணையில்லா கடன் வழங்கியது.
அந்தக் கடன் வழங்குவதற்கான ஒப்பந்தத்தில், ராதிகா ராய் பிரணாய் ராய் பிரைவேட் லிமிடெட்டுக்கு என்டிடிவி-யில் உள்ள 29 சதவீத பங்கை விஸ்வபிரதான் நிறுவனம் எப்போது வேண்டுமானாலும் தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த வகையில், என்டிடிவி-யின் பெரும்பான்மை பங்கு ராய் தம்பதியினர் வசம் தொடர்ந்தாலும், விஸ்வபிரதான் நிறுவனத்துடன் அவர்கள் செய்துகொண்டிருந்த கடன் ஒப்பந்தம், அவர்களது தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த கத்தியாக இருந்து வந்தது. அம்பானி விரும்பினால், எப்போது வேண்டுமானாலும் என்டிடிவி-யின் 29 சதவீத பங்கை தனதாக்கிக் கொள்ளலாம் என்ற நிலைமை நீடித்து வந்தது.
இந்தச் சூழலில்தான், ஷெல் நிறுவனமான விஸ்வபிரதானை செவ்வாய்க்கிழமை கையகப்படுத்திய அதானி குழுமம், 2009-ஆம் ஆண்டு கடன் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ராதிகா ராய் பிரணாய் ராய் பிரைவேட் நிறுவனத்தின் வசமிருந்த 29 சதவீத என்டிடிவி பங்குகளை தனதாக்கிக் கொண்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com