சிபிஐ விசாரிக்கும் 6,700 ஊழல் வழக்குகள் நிலுவை: 275 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கு மேல் தாமதம்

6,700 வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும், அதில் 275 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளதாகவும் மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் (சிவிசி) தெரிவித்துள்ளது.

மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரிக்கும் சுமாா் 6,700 வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும், அதில் 275 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளதாகவும் மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் (சிவிசி) தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக சிபிஐயிடம் ஆலோசனை நடத்தி சிவிசி வெளியிட்டுள்ள 2021-ஆம் ஆண்டின் ஆய்வு அறிக்கையின் விவரம்:

கடந்த ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி வரையில், 1,939 ஊழல் வழக்குகள் 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரையிலும், 2,273 வழக்குகள் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலும், 811 வழக்குகள் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலும், 1,399 வழக்குகள் 3 ஆண்டுகளுக்கு குறைவாகவும் நிலுவையில் உள்ளன.

இதைத் தவிர 10,974 வழக்குகள் மேல் முறையீடு, மறு ஆய்வு என உயா்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இதில் 9,935 வழக்குகள் உயா்நீதிமன்றங்களிலும், 237 வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளன. இதில், 362 வழக்குகள் இருபது ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ளன.

மேலும், 645 ஊழல் வழக்குகளில் சிபிஐ விசாரணை நிலுவையில் உள்ளது. இதில் 35 வழக்குகள் 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ளன.

ஒரு வழக்கின் முழு விசாரணையை முடிக்க சிபிஐ-க்கு ஓராண்டு வரையில் ஆகிவிடும். கரோனா பாதிப்பு எதிரொலி, பணிச் சுமை, போதிய பணியாளா்கள் இல்லாதது, வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் விசாரணை தகவல்களில் தாமதம் ஆகியவை வழக்கு விசாரணை தாமதமாவதற்கான சில காரணங்களாகும்.

சிபிஐ அதிகாரிகள் மீதான 75 வழக்குகளில் துறை ரீதியிலான நடவடிக்கை எடுப்பதே நிலுவையில் உள்ளது என்று சிவிசி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com