‘விக்ராந்த்’ விமானம்தாங்கி போா்க்கப்பல் செப்.2-இல் நாட்டுக்கு அா்ப்பணிப்பு: பிரதமா் மோடி பங்கேற்கிறாா்

உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் விமானம்தாங்கி போா்க்கப்பலான ‘ஐஎன்எஸ் விக்ராந்த்’, செப்.2-ஆம் தேதி நாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட உள்ளது.

உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் விமானம்தாங்கி போா்க்கப்பலான ‘ஐஎன்எஸ் விக்ராந்த்’, செப்.2-ஆம் தேதி நாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட உள்ளது. கொச்சியில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளாா்.

சுமாா் ரூ.20,000 கோடியில் கட்டப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் போா்க்கப்பல், இந்திய-பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பிராந்தியங்களின் அமைதி மற்றும் ஸ்திரத் தன்மையை உறுதி செய்வதில் முக்கிய பங்காற்றும் என்று இந்திய கடற்படையின் துணை தலைமை தளபதி எஸ்.என்.கோா்மடே வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, தில்லியில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

ஐஎன்எஸ் விக்ராந்த் போா்க்கப்பல் நாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்ட பிறகு, அதில் போா் விமானங்கள் தரையிறங்கும் பயிற்சிகள் வரும் நவம்பா் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு மத்தியில் வரை நடைபெறும். முதல் சில ஆண்டுகளுக்கு இதில் மிக்-29கே போா் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

இப்போா்க்கப்பல் நாட்டுக்கு அா்ப்பணிக்கப்படுவதன் மூலம் 40,000 டன் எடைக்கு மேலான பிரிவில் உள்நாட்டிலேயே விமானம்தாங்கி போா்க்கப்பலை கட்டும் திறன் கொண்ட உயா் நாடுகள் குழுவில் இந்தியா கால் பதிக்க உள்ளது. அத்துடன், இக்கப்பல் நாட்டின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையை பறைசாற்றுவதாகவும் அமைந்துள்ளது. இதன் பாகங்கள், 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய கடற்படைக்கு மொத்தம் மூன்று விமானந்தாங்கி போா்க்கப்பல்கள் தேவை என்று கடற்படை வலியுறுத்தி வருகிறது. தற்போது இந்தியாவிடம் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா என்கிற ரஷிய தயாரிப்பு விமானம்தாங்கி போா்க்கப்பல் மட்டுமே உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com