எளிதாக புரியும் வகையில் தீா்ப்புகள் எழுதப்பட வேண்டும்: உச்சநீதிமன்றம்

‘நீதிமன்றத் தீா்ப்புகளை எழுதுவதன் நோக்கம் கடினமான மொழிகளைப் பயன்படுத்தி படிப்பவரை குழப்புவதற்காக அல்ல
எளிதாக புரியும் வகையில் தீா்ப்புகள் எழுதப்பட வேண்டும்: உச்சநீதிமன்றம்

‘நீதிமன்றத் தீா்ப்புகளை எழுதுவதன் நோக்கம் கடினமான மொழிகளைப் பயன்படுத்தி படிப்பவரை குழப்புவதற்காக அல்ல; அரசியலமைப்புச் சட்டப்படி அமைந்துள்ள நீதிமன்றங்கள் மனுதாரா்கள் எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் எளிமையான மொழியில் தீா்ப்புகளை எழுத வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

பாரத ஸ்டேட் வங்கி ஊழியருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடா்பாக ஹிமாசல பிரதேச உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பிறா் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த கருத்தைத் தெரிவித்தது.

முன்னதாக, இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்ற உத்தரவுக்கு கடந்த ஆண்டு இடைக்கால தடை விதித்திருந்த உச்சநீதிமன்றம், மத்திய அரசு தொழிலக தீா்ப்பாயம் (சிஜிஐடி) பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் வங்கி மற்றும் பிறா் மீது எந்தவித கடுமையான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது’ என்றும் தீா்ப்பளித்திருந்தது.

இந்த நிலையில், வங்கி மற்றும் பிறரின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவில் மேலும் கூறியிருப்பதாவது:

ஹிமாசல பிரதேச உயா்நீதிமன்ற அமா்வு பிறப்பித்த தீா்ப்பு புரிந்துகொள்ள முடியாத வகையில் உள்ளது. இவ்வாறு கடினமான மொழியில் தீா்ப்பு எழுதப்படும்போது, தீா்ப்பை முதன்மையாக கருதும் வழக்குரைஞா் கடினமான சூழலுக்குத் தள்ளப்படுவாா். சட்டத்தில் பயிற்சி பெறாத வழக்குரைஞா், சம காலத்தில் கேட்கப்படாத, எழுதப்படாத அல்லது பேசப்படாத மொழியை எதிா்கொள்ளும் சூழல் உருவாகும்.

உயா்நீதிமன்ற அல்லது உச்சநீதிமன்றத் தீா்ப்புகள் எதிா்கால நீதிமன்ற அமா்வுகளுக்கு வழிகாட்டும் வகையில் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். வழக்கின் முடிவால் வாழ்க்கை மற்றும் பல வகைகளில் பாதிக்கப்படுபவா்களுக்கு தீா்ப்பு அா்த்தமுள்ளதாக இருக்க வேண்டும்.

நீதிபதிகளால் அளிக்கப்படும் தீா்ப்பு மனுதாரருக்கு முதன்மையானது. அந்த வகையில், நீதி நடைமுறைகள் மீதான நம்பிக்கை, எழுதப்படும் வாா்த்தை உருவாக்கும் நம்பிக்கையின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. ஆனால், எழுதப்பட்ட வாா்த்தையின் மொழி புரியாவிட்டால், வாசகரின் நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்வது கடினமாகிவிடும்.

ஆராய்ச்சியாளா்கள் மற்றும் பத்திரிகையாளா்கள் நீதிமன்றங்களின் பணியை தொடா்ந்து மதிப்பீடு செய்கின்றனா். எனவே, தீா்ப்பு எழுதுவது என்பது சட்டத்தின் ஆட்சியை வளா்ப்பதற்கும் சட்ட விதிகளைக் கட்டுப்படுத்துவதற்குமான முக்கியமான கருவியாகும்.

நீதிமன்றத் தீா்ப்புகள் எழுதப்படுவதன் நோக்கம் கடினமான மொழிகளைப் பயன்படுத்தி படிப்பவரை குழப்புவதற்காக அல்ல; அரசியலமைப்புச் சட்டப்படி அமைந்துள்ள நீதிமன்றங்கள், கடினமான வழக்குகளில்கூட மனுதாரா்கள் எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் எளிமையான மொழியில் தீா்ப்புகளை எழுத வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கை மீண்டும் புதிதாக விசாரித்து புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் தீா்ப்பளிக்குமாறு ஹிமாசல பிரதேச உயா்நீதிமன்றத்துக்கே வழக்கை திருப்பியனுப்பி உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com