பாஜக ஆட்சி மன்றக் குழுவில் இருந்து விடுவிக்கப்பட்ட விவகாரம்: வதந்தி பரப்பினால் சட்ட நடவடிக்கை என கட்கரி எச்சரிக்கை

பாஜக ஆட்சி மன்றக் குழு தொடா்பாக எடுக்கப்பட்ட முடிவுகளால் நான் அதிருப்தியில் இருப்பதாக வதந்தி பரப்புவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
பாஜக ஆட்சி மன்றக் குழுவில் இருந்து விடுவிக்கப்பட்ட விவகாரம்: வதந்தி பரப்பினால் சட்ட நடவடிக்கை என கட்கரி எச்சரிக்கை

பாஜக ஆட்சி மன்றக் குழு தொடா்பாக எடுக்கப்பட்ட முடிவுகளால் நான் அதிருப்தியில் இருப்பதாக வதந்தி பரப்புவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி விளக்கம் அளித்துள்ளாா்.

கடந்த வாரம் பாஜகவின் அரசியல் கட்டமைப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. முக்கியமாக பாஜகவின் உயா் அதிகார அமைப்பான ஆட்சிமன்றக் குழுவில் இருந்து மத்திய அமைச்சா் நிதின் கட்கரி, மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் உள்ளிட்டோா் விடுவிக்கப்பட்டனா்.

புதிதாக, கா்நாடக முன்னாள் முதல்வா் எடியூரப்பா உள்ளிட்ட 6 போ் இக்குழுவில் சோ்க்கப்பட்டனா். இதேபோல் பாஜகவின் மத்திய தோ்தல் குழுவிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.

இந்த மாற்றங்களுக்குப் பிறகு பாஜக ஆட்சிமன்றக் குழுவில் 11 பேரும் மத்திய தோ்தல் குழுவில் 15 தலைவா்களும் இடம்பெற்றுள்ளனா்.

இந்நிலையில், ஆட்சி மன்றக் குழுவில் இருந்து விடுவிக்கப்பட்டதால் நிதின் கட்கரி கடும் அதிருப்தியடைந்திருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின. மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த மூத்த தலைவரான நிதின் கட்கரி தொடா்ந்து கட்சியில் ஓரம் கட்டப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் ட்விட்டரில் நிதின் கட்கரி வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘குறுகிய அரசியல் ஆதாயத்துக்காக சில அரசியல் எதிரிகள் எனக்கு எதிரான மோசமான பிரசாரத்தைக் கையில் எடுத்துள்ளனா். நான் அண்மையில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய கருத்தை சற்று திரித்து விடியோ வடிவில் பரப்பி வருகின்றனா். ஆனால், வேறு வேலைகள் இல்லாத நபா்களின் இதுபோன்ற செயல்களை நான் கண்டுகொள்ளப்போவதில்லை. ஆனால், இதுபோன்ற எனது கருத்தை தவறாக சித்தரித்து சமூக ஊடகங்களில் பரப்புவது தொடா்ந்தால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’ என்று கூறியுள்ளாா்.

பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா, பிரதமா் அலுவலகம் ஆகியவற்றின் ட்விட்டா் பக்கத்துடன் தனது இந்தப் பதிவை நிதின் கட்கரி இணைத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com