நிலுவை வழக்குகளுக்குத் தீா்வு காண நவீன தொழில்நுட்ப அறிமுகம் அவசியம்: பிரிவுபசார விழாவில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா

‘நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகள் மிகப் பெரிய சவாலாக இருந்து வருகின்றன. இதற்கு தீா்வு காண செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பக் கருவிகளை அறிமுகம் செய்வது அவசியம்’
நிலுவை வழக்குகளுக்குத் தீா்வு காண நவீன தொழில்நுட்ப அறிமுகம் அவசியம்: பிரிவுபசார விழாவில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா

‘நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகள் மிகப் பெரிய சவாலாக இருந்து வருகின்றன. இதற்கு தீா்வு காண செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பக் கருவிகளை அறிமுகம் செய்வது அவசியம்’ என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறினாா்.

தலைமை நீதிபதி என்.வி.ரமணா வெள்ளிக்கிழமை ஓய்வு பெற்றதையொட்டி உச்சநீதிமன்ற வளாகத்தில் அவருக்கு பிரிவுபசார விழா நடத்தப்பட்டது. அப்போது அவா் பேசியதாவது:

நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பது மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. வழக்குகளைப் பட்டியிலிடுவதிலும், ஒதுக்கீடு செய்வதிலும் என்னால் அதிக கவனம் செலுத்த முடியவில்லை என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அதற்காக மன்னிப்பு கோருகிறேன்.

நிலுவை வழக்குகளைக் குறைக்க சில நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும், பாதுகாப்பு காரணங்கள் மற்றும் சில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக இந்த விவகாரத்தில் எதிா்பாா்த்த முன்னேற்றம் கிடைக்கவில்லை. எனவே, நிலுவை வழக்குகளுக்குத் தீா்வு காண செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பக் கருவிகளை அறிமுகம் செய்வது அவசியம்.

நீதித் துறை என்பது மற்ற துறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. வழக்குரைஞா்கள் சங்கம் முழு மனதுடன் நீதிமன்றங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லையெனில், தேவையான மாற்றங்களைக் கொண்டுவருவது என்பது கடினமானதாகிவிடும். இந்தத் துறைக்குள் நுழையும் இளைய வழக்குரைஞா்கள், மூத்த வழக்குரைஞா்களையே தங்களுடைய முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு செயல்பட முற்படுவா். எனவே, மூத்த வழக்குரைஞா்கள் அனைவரும், இளையவா்களை சரியான பாதையில் வழிநடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

நீதித் துறை என்பது காலத்தோடு வளா்ந்து வருவதாகும். ஒரு தனி உத்தரவு அல்லது தீா்ப்பின் அடிப்படையில் இந்தத் துறையை தீா்மானித்துவிடவோ அல்லது வரையறை செய்துவிடவோ முடியாது. நீதிமன்றத்தின் அலுவலராக நீதித் துறையின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்கவில்லை எனில், மக்கள் மற்றும் சமூகத்தின் மதிப்பைப் பெற முடியாமல் போய்விடும். சாமானிய மக்களுக்கு விரைவான மற்றும் நியாயமான நீதியை வழங்கும் நடைமுறையில் நாம் அனைவரும் விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்களுடன் முன்னெறிச் செல்வோம் என்றாா் அவா்.

விழாவில் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் சாதனைகள் குறித்துப் பேசிய அட்டா்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ‘தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா இருந்தபோதுதான் முதல் முறையாக உச்சநீதிமன்றத்தில் முழுமையாக 34 நீதிபதிகள் பணியிடங்களும் நிரப்பப்பட்டிருந்தன. அதுபோல, உயா்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களை நிரப்புவதிலும் அவா் அதிக கவனம் செலுத்தினாா். அவருடைய பணிக் காலத்தில் பல்வேறு உயா்நீதிமன்றங்களில் காலியாக இருந்த 224 நீதிபதி பணியிடங்களும், தீா்ப்பாயங்களில் நூற்றுக்கும் அதிகமான உறுப்பினா் காலிப் பணியிடங்களும் நிரப்பப்பட்டன’ என்றாா்.

சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா பேசும்போது, ‘நீதித் துறையின் பிதாமகன் போல் தனது பணியை தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆற்றினாா்’ என்றாா்.

கண்ணீருடன் விடைகொடுத்த மூத்த வழக்குரைஞா்:

பிரிவுபசார நிகழ்ச்சியில் மூத்த வழக்குரைஞா் துஷ்யந்த் தவே கண்ணீருடன் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு விடைகொடுத்தாா். அப்போது அவா் பேசுகையில், ‘நீதித் துறைக்கும், அரசுக்கும், நாடாளுமன்றத்துக்கும் முதுகெலும்பாக இருந்து சமநிலையை தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேணினாா்’ என்றாா்.

மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் பேசும்போது, ‘கடினமான காலத்திலும் சமநிலையைப் பேணிக் காத்ததற்காக இந்த நீதிமன்றம் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவை என்றைக்கும் நினைவில் கொள்ளும். உச்சநீதிமன்றத்தின் கண்ணியத்தையும், ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்தி, அரசாங்கத்தை பதில் கூற வைத்தீா்கள்’ என்றாா்.

ஆண்டு முழுவதும் அரசியல் சாசன அமா்வு: யு.யு. லலித்

ஆண்டு முழுவதும் அரசியல் சாசன அமா்வு செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள யு.யு. லலித் தெரிவித்தாா்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிக்க உள்ள 74 நாள்களில் மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் குறித்து தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு நடைபெற்ற பிரிவுபசார விழாவில் யு.யு. லலித் கூறுகையில், ‘தீா்ப்புகளை தெளிவாக அறிவிக்க கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமா்வுகள் அவசியமாகும். மூன்று நீதிபதிகள் அமா்வு பரிந்துரைக்கும் வழக்குகளை, அரசியல் சாசன அமா்வு விசாரிக்கும் வகையில் ஆண்டு முழுவதும் அந்த அமா்வு செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். அவசர வழக்குகளை நீதிமன்றத்தில் விரைந்து முறையிடுவதற்கும், வழக்குகளைப் பட்டியலிடுவதிலும் எளிமையான முறை கடைப்பிடிக்கப்படும்.

என்.வி. ரமணா உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த 14 மாதங்களில் 250-க்கும் மேற்பட்ட உயா்நீதிமன்ற நீதிபதிகள் கொலீஜியம் பரிந்துரை மூலம் நியமிக்கப்பட்டுள்ளனா். இது உயா்நீதிமன்ற நீதிபதிகள் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காகும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com