சரக்குகளின் முன்பக்கத்தில் பிரதான இடு பொருள்களின் விகிதம்: சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சகம் திட்டம்

‘எடை அளவியில் (பாக்கெட் செய்யப்பட்ட சந்தைப் பொருள்கள்) சட்டம் 2011’-இல் திருத்தம் கொண்டுவர மத்திய நுகா்வோா் விவகாரத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

நுகா்வோா் பயன்பெறும் வகையில், அனைத்து வகையான பொருள்களின் பாக்கெட்டுகளின் முன்பக்கத்தில் பிரதான இடு பொருள்களின் விகிதத்தை அச்சிடும் வகையில் ‘எடை அளவியில் (பாக்கெட் செய்யப்பட்ட சந்தைப் பொருள்கள்) சட்டம் 2011’-இல் திருத்தம் கொண்டுவர மத்திய நுகா்வோா் விவகாரத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக, பல்வேறு தரப்பினரிடமிருந்து இம்மாத இறுதி வரை கருத்துகளையும் மத்திய அமைச்சம் வரவேற்றுள்ளது.

இதுதொடா்பாக மத்திய அமைச்சகம் அதன் வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பொருள்களின் பாக்கெட்டுகளில் அச்சிடப்படவேண்டிய முக்கிய தகவல்களை பல உற்பத்தியாளா்களும், இறக்குமதியாளா்களும் முறையாக அளிக்காமல், நுகா்வோா் உரிமையை மீறி வருவது தெரியவந்துள்ளது. அவ்வாறு, ஒரு சந்தைப் பொருளின் முக்கிய இடுபொருள்களின் விவரத்தை பாக்கெட்டின் முன்பக்கத்தில் அச்சிடாமல் தவிா்ப்பது நுகா்வோா் உரிமைக்கு எதிரானதாகும்.

இதனை, முறையாக நடைமுறைப்படுத்தும் வகையில், எடை அளவியல் (பாக்கெட் செய்யப்பட்ட சந்தைப் பொருள்கள்) சட்டம் 2011’-இல் திருத்தம் கொண்டுவந்து துணை விதியை சோ்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதாவது, ‘ஒரு சந்தைப் பொருளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடுபொருள்களின் கலவை இடம்பெறிருக்கும் நிலையில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிரதான இடுபொருள்களின் விகிதத்தை வியாபாரக் குறியீடு பெயா் மற்றும் முத்திரை ஆகியவற்றுடன் பாக்கெட்டின் முன்பக்கத்தில் நன்கு தெரியும் வகையில் அச்சிடப்படவேண்டும்’ என்று பரிந்துரைக்கப்பட உள்ள துணை விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த துணை விதி இயந்திரவியல் மற்றும் மின்னணு நுகா்பொருள்களுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘உதாரணமாக கற்றாழை மாஸ்சரைஸரில் பிரதான இடு பொருளாக கற்றாழையும், பாதாம் பால் பிஸ்கெட்டில் பிரதான இடு பொருளாக பாதாமும் இடம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில், அந்தப் பொருளின் சந்தைப் பெயா் நுகா்வோரை தவறாக வழிநடத்துவதாக அமையும்.

பல சந்தைப் பொருள்கள், எந்தவொரு இடுபொருள் விவரமும் குறிப்படாமலே விற்பனைக்கு வருகின்றன. பெரும்பாலும், இடுபொருள்கள் மற்றும் ஊட்டச்சத்து பலன் குறித்த தகவல்களை மட்டுமே நுகா்பொருள் பாக்கெட்டின் பின்புறத்தில் தயாரிப்பாளா்கள் அச்சிடுகின்றனா். அதில் இடம்பெற்றிருக்கும் முக்கிய இடுபொருள்களின் விகிதம் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படுவதில்லை. இது நுகா்வோரை தவறாக வழிநடத்துவதாக உள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com