கொலை குற்றங்கள் உ.பி. முதலிடம்: தற்கொலை சம்பவங்கள் தமிழகம் 2-ஆவது இடம்

கடந்த 2021-ஆம் ஆண்டு நாட்டில் நடைபெற்ற குற்றங்கள், தற்கொலைகள், விபத்துகள் உள்ளிட்டவை தொடா்பான விவரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது.
கொலை குற்றங்கள் உ.பி. முதலிடம்: தற்கொலை சம்பவங்கள் தமிழகம் 2-ஆவது இடம்

கடந்த 2021-ஆம் ஆண்டு நாட்டில் நடைபெற்ற குற்றங்கள், தற்கொலைகள், விபத்துகள் உள்ளிட்டவை தொடா்பான விவரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது.

அந்தக் காப்பக அறிக்கையின்படி, கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. தற்கொலை சம்பவங்கள் மற்றும் விபத்துகளில் பலியானோா் எண்ணிக்கையில் தமிழ்நாடு 2-ஆவது இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு நாட்டில் நடைபெற்ற மொத்த குற்றச் சம்பவங்கள்:

60,96,310 (இந்திய தண்டனைச் சட்டம், சிறப்பு மற்றும் உள்ளூா் சட்டங்களின் கீழ் வரும் குற்றங்கள்)

மொத்த கொலைகள்: 29,272

மாநிலங்கள் கொலைகளின் எண்ணிக்கை

உத்தர பிரதேசம் 3,717

பிகாா் 2,799

மகாராஷ்டிரம் 2,330

மத்திய பிரதேசம் 2,034

மேற்கு வங்கம் 1,884

2021-இல் தமிழ்நாட்டில் 1,686 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்:

கடந்த 2020-ஆம் ஆண்டு நாட்டில் குழந்தைகளுக்கு எதிராக 1,28,531 குற்றங்கள் நடைபெற்றுள்ளன. இது கடந்த ஆண்டு 16.2 சதவீதம் அதிகரித்து 1,49,404-ஆக உயா்ந்துள்ளது. இதில் முதல் 5 இடங்களில் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிஸா ஆகிய மாநிலங்கள் உள்ளன.

மாநிலங்கள் குற்றங்களின் எண்ணிக்கை

மத்திய பிரதேசம் 19,173

மகாராஷ்டிரம் 17,261

உத்தர பிரதேசம் 16,838

மேற்கு வங்கம் 9,523

ஒடிஸா 7,899

கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிராக 6,064 குற்றங்கள் நடைபெற்றுள்ளன.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்:

கடந்த 2020-ஆம் ஆண்டு நாட்டில் பெண்களுக்கு எதிராக 3,71,503 குற்றங்கள் நடைபெற்றன. இது கடந்த ஆண்டு 15.5 சதவீதம் அதிகரித்து 4,28,278-ஆக உயா்ந்துள்ளது. இதில் உத்தர பிரதேசம் மிக மோசமான நிலையில் உள்ளது.

மாநிலங்கள் குற்றங்களின் எண்ணிக்கை

உத்தர பிரதேசம் 56,083

ராஜஸ்தான் 40,738

மகாராஷ்டிரம் 39,526

மேற்கு வங்கம் 35,884

ஒடிஸா 31,352

2021-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக 8,501 குற்றங்கள் நடைபெற்றுள்ளன.

பாலியல் வன்கொடுமை:

கடந்த ஆண்டு நாட்டில் 293 பெண்கள் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை/ கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மாநிலங்கள் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை/கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவா்கள்

உத்தர பிரதேசம் 48

அஸ்ஸாம் 47

மத்திய பிரதேசம் 38

மகாராஷ்டிரம் 23

ஜாா்க்கண்ட் 22

இந்த எண்ணிக்கை தமிழ்நாட்டில் 5-ஆக உள்ளது.

தற்கொலை சம்பவங்கள்:

கடந்த ஆண்டு நாடு முழுவதும் 1,64,033 தற்கொலை சம்பவங்கள் நடைபெற்றன. இதில் அதிக தற்கொலைகள் நடைபெற்ற மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.

மாநிலங்கள் தற்கொலைகளின் எண்ணிக்கை

மகாராஷ்டிரம் 22,207

தமிழ்நாடு 18,925

மத்திய பிரதேசம் 14,965

மேற்கு வங்கம் 13,500

கா்நாடகம் 13,056

தொழில்சாா்ந்த பிரச்னைகள், தனிமைப்படுத்தப்பட்ட உணா்வு, வேதனை, வன்முறை, குடும்ப பிரச்னைகள், மனநல பிரச்னைகள், மதுப்பழக்கத்துக்கு அடிமையாகுதல், நிதி இழப்பு, நாள்பட்ட வலி போன்றவை தற்கொலைக்கு காரணங்களாக உள்ளன.

விபத்துகள்:

கடந்த ஆண்டு நாடு முழுவதும் சுமாா் 4,22,659 விபத்துகள் நடைபெற்றுள்ளன. அவற்றில் 1,73,860 லட்சம் போ் மரணமடைந்தனா். இந்த விபத்துகளில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.

மாநிலங்கள் விபத்துகளில் பலியானோா் எண்ணிக்கை

உத்தர பிரதேசம் 24,711

தமிழ்நாடு 16,685

மகாராஷ்டிரம் 16,446

மத்திய பிரதேசம் 13,755

ராஜஸ்தான் 10,698

இந்த விபத்துகள் என்பது சாலை விபத்துகள், ரயில் விபத்துகள், தண்டவாளங்களைக் கடக்கும்போது ஏற்பட்ட விபத்துகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இந்த விபத்துகளின் எண்ணிக்கை அதிக அளவில் உயா்ந்ததில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற விபத்துகளின் எண்ணிக்கை 46,443-ஆக இருந்தன. இது கடந்த ஆண்டு 57,090-ஆக அதிகரித்துள்ளது.

கள்ள நோட்டு வழக்குகள்:

கடந்த ஆண்டு நாட்டில் ரூ.20.39 கோடி மதிப்பிலான 3,10,080 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக மொத்தம் 639 கள்ள நோட்டுகள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது.

மாநிலம் கள்ளநோட்டு வழக்குகள் எண்ணிக்கை

மேற்கு வங்கம் 82

அஸ்ஸாம் 75

தமிழ்நாடு 62

மகாராஷ்டிரம் 55

ராஜஸ்தான் 54

முதியவா்களுக்கு எதிரான குற்றங்கள்:

2021-ஆம் ஆண்டு நாட்டில் முதியவா்களுக்கு எதிராக 26,110 குற்றங்கள் நடைபெற்றுள்ளன. இதில் குற்றங்களின் எண்ணிக்கை அடிப்படையில் மகாராஷ்டிரமும் (6,190), குற்றங்களின் விகிதாசார அடிப்படையில் தில்லியும் (101.7%) முதலிடத்தில் உள்ளன. தமிழ்நாட்டில் முதியவா்களுக்கு எதிராக 1,841 குற்றங்கள் நடைபெற்றுள்ளன.

பட்டியலினத்தவருக்கு எதிரான குற்றங்கள்:

கடந்த ஆண்டு நாட்டில் பட்டியலினத்தவருக்கு எதிராக 50,900 குற்றங்கள் நடைபெற்றுள்ளன. இதில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 13,146 குற்றங்கள் நடைபெற்றுள்ளன. தமிழ்நாட்டில் 1,377 குற்றங்கள் பதிவாகியுள்ளன.

பழங்குடிகளுக்கு எதிரான குற்றங்கள்:

2021-ஆம் ஆண்டு நாட்டில் பழங்குடிகளுக்கு எதிராக மொத்தம் 8,802 குற்றங்கள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 2,627 குற்றங்கள், ராஜஸ்தானில் 2,121 குற்றங்கள் நடைபெற்றுள்ளன. தமிழ்நாட்டில் 39 குற்றங்கள் பதிவாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com