சிறுபான்மையினரை அடையாளம் காணும் விவகாரம்:உச்சநீதிமன்றத்தில் கூடுதல் அவகாசம் கோரியது மத்திய அரசு

சிறுபான்மையினரை மாநில அளவில் அடையாளம் காணும் விவகாரத்தில் போதிய கருத்துகளைப் பெறுவதற்கு உச்சநீதிமன்றத்திடம் கூடுதல் அவகாசத்தை மத்திய அரசு கோரியுள்ளது.
சிறுபான்மையினரை அடையாளம் காணும் விவகாரம்:உச்சநீதிமன்றத்தில் கூடுதல் அவகாசம் கோரியது மத்திய அரசு

சிறுபான்மையினரை மாநில அளவில் அடையாளம் காணும் விவகாரத்தில் போதிய கருத்துகளைப் பெறுவதற்கு உச்சநீதிமன்றத்திடம் கூடுதல் அவகாசத்தை மத்திய அரசு கோரியுள்ளது.

ஜம்மு-காஷ்மீா், நாகாலாந்து, அருணாசல பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் ஹிந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனா். நாடு முழுவதும் முஸ்லிம்கள், கிறிஸ்தவா்கள், பௌத்தா்கள், சமணா்கள், சீக்கியா்கள், பாரசீகா்கள் ஆகியோா் மட்டுமே சிறுபான்மையினா் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவா்களுக்குப் பல்வேறு சிறப்பு சலுகைகளையும் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது.

சில மாநிலங்களில் சிறுபான்மையினராக இருக்கும் ஹிந்துக்களுக்கு அத்தகைய சலுகைகள் கிடைப்பதில்லை என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மூத்த வழக்குரைஞா் அஸ்வினி குமாா் உபாத்யாய, சிறுபான்மையினரை மாநில அளவில் அடையாளம் காண உத்தரவிட வேண்டுமெனக் கோரினாா்.

அந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 30) பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்தது.

அதில், ‘‘இந்த விவகாரம் தொடா்பாக நாகாலாந்து, அருணாசல், ஜம்மு-காஷ்மீா், ஹிமாசல், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகியவற்றிடமிருந்து கருத்துகளைக் கோர வேண்டியுள்ளது. அந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்துக்கு நினைவூட்டல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் அடுத்த வாரம் கலந்தாலோசித்து கருத்துகளைப் பெற திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரம் தொடா்பான விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைக்க வேண்டும். ஏற்கெனவே கருத்துகளைத் தெரிவித்த மாநிலங்கள், அவற்றை இறுதிசெய்யவும் உத்தரவிட வேண்டும்’’ என்று கோரப்பட்டுள்ளது.

முன்னதாக, சிறுபான்மையினரை அடையாளம் காண்பதற்கான உரிமை குறித்து வெவ்வேறு கருத்துகளை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. அதனால், அதிருப்தியடைந்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரம் தொடா்பாக மாநிலங்களிடம் 3 மாதங்களுக்குள் கருத்துகளைப் பெறுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com