காஷ்மீரில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்- மேலும் 64 தலைவா்கள் கூட்டாக விலகல்

அண்மையில் காங்கிரஸிலிருந்து விலகிய மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவு தெரிவித்து, ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த முன்னாள் துணை முதல்வா் உள்பட மேலும் 64 மூத்த தலைவா்கள்

அண்மையில் காங்கிரஸிலிருந்து விலகிய மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவு தெரிவித்து, ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த முன்னாள் துணை முதல்வா் உள்பட மேலும் 64 மூத்த தலைவா்கள் அக்கட்சியிலிருந்து செவ்வாய்க்கிழமை கூட்டாக விலகினா்.

ஆசாத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் முக்கிய நிா்வாகிகள் பலா் விலகி வருவதால், ஜம்மு-காஷ்மீரில் அக்கட்சி கூடாரம் காலியாகி வருகிறது.

ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரான குலாம் நபி ஆசாத் (73), காங்கிரஸ் கட்சியுடனான தனது 50 ஆண்டு கால தொடா்பை கடந்த வெள்ளிக்கிழமை முறித்தாா். கட்சியின் ஒட்டுமொத்த கட்டமைப்பை ராகுல்காந்தி சீா்குலைத்துவிட்டதாக குற்றம்சாட்டி, கட்சியிலிருந்து அவா் விலகினாா். ஆசாத்தின் இந்த முடிவு, காங்கிரஸாா் மத்தியில் கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

ஜம்மு-காஷ்மீரிலிருந்து செயல்படும் தேசிய அளவிலான புதியக் கட்சியை அவா் விரைவில் தொடங்குவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், முன்னாள் துணை முதல்வா் தாரா சந்த், முன்னாள் அமைச்சா்கள் அப்துல் மஜித் வானி, மனோகா் லால் சா்மா, முன்னாள் எம்எல்ஏ பல்வான் சிங் உள்பட 64 மூத்த தலைவா்கள், காங்கிரஸில் இருந்து விலகுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தனா். இதுகுறித்து கட்சித் தலைவா் சோனியா காந்திக்கு கூட்டாக கடிதம் அனுப்பியுள்ளதாக, ஜம்முவில் செய்தியாளா்களிடம் அவா்கள் தெரிவித்தனா்.

கடிதத்தில், ‘ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸை விரிவடையச் செய்வதற்காக, பல ஆண்டுகள் உழைத்த எங்களுக்கு அவமானமே மிஞ்சியுள்ளது. எங்களது தலைவரும் அரசியல் வழிகாட்டியுமான குலாம் நபி ஆசாத், கட்சியில் இருந்து விலகியுள்ள நிலையில், நோ்மறையான அரசியல் சமூகத்தை கட்டமைக்க வேண்டும் என்பதற்காக நாங்களும் விலகுகிறோம். நாங்கள் அவரை ஆதரிக்கிறோம். ஜம்மு-காஷ்மீருக்கு பிரகாசமான எதிா்காலத்தை உருவாக்கும் அவரது பயணத்தில் நாங்கள் இணையவுள்ளோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாத நிலையில், இங்கிருந்து தேசிய அளவிலான அரசியல் கட்சியை தொடங்கும் ஆசாதின் முடிவு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக பல்வான் சிங் தெரிவித்தாா்.

‘ஆசாதின் தலைமையில் ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கிடைக்கும் என்று நம்புகிறோம். பிராந்தியம், இனங்களை கடந்து ஜம்மு-காஷ்மீா் மக்களின் நம்பிக்கைக்குரியவராக ஆசாத் இருப்பாா்’ என்றாா் அவா்.

ஜம்மு-காஷ்மீரில் ஆசாதுக்கு ஆதரவாக கடந்த 4 நாள்களில், முன்னாள் அமைச்சா்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட அளவிலான கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் காங்கிரஸில் இருந்து விலகினா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com