குஜராத் கலவரம் தொடா்பான நிலுவை மனுக்கள்: உச்சநீதிமன்றம் முடித்துவைப்பு

‘2002 குஜராத் கலவரம் தொடா்பாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என

‘2002 குஜராத் கலவரம் தொடா்பாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆமையம் (என்ஹெச்ஆா்சி) 20 ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்த மனு உள்பட நிலுவையில் இருந்த 11 மனுக்கள் மீதான விசாரணை பயனற்றது’ என்று கூறி அந்த மனுக்கள் மீதான விசாரணையை முடித்துவைத்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

குஜராத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு ரயில் எரிப்பு சம்பவம், அதனைத் தொடா்ந்து நடைபெற்ற கலவரம் தொடா்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அதில் பலருக்கு தண்டனையும் சிலருக்கு நிவாரணங்களும் வழங்கப்பட்டன. பலா் விடுவிக்கப்பட்டனா்.

இதற்கிடையே, விசாரணை முறையாக நடத்தப்படவில்லை என்று புகாா் தெரிவித்தும், நீதிமன்ற தீா்ப்புகளுக்கு எதிராகவும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் ஏராளமான மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

குறிப்பாக, இந்த கலவரத்தில் நடைபெற்ற வன்முறை தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என 2002-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதே ஆண்டில், சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக் கோரி என்ஹெச்ஆா்சி சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற நேரடி மேற்பாா்வையின் கீழான விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சமூக ஆா்வலா் தீஸ்தா சீதல்வாட் ‘நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள்’ அமைப்பு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுக்கள் உள்பட நிவாரணம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உள்ளிட்ட 11 மனுக்கள் பல ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தன.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், ஜே.பி.பாா்திவாலா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த கலவரம் தொடா்பாக உச்சநீதிமன்றம் சாா்பில் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) தரப்பு மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, மற்றும் பிற மனுதாரா்கள் தரப்பு வழக்குரைஞா்களும் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனா்.

குறிப்பாக, ‘எஸ்ஐடி சாா்பில் இந்த கலவரம் தொடா்பாக விசாரிக்கப்பட்ட 9 வழக்குகளில் ஒன்றான நரோடாகான் கிராம வன்முறை வழக்கு, விசாரணை நீதிமன்றத்தில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வழக்கு தவிர, உச்சநீதிமன்றம், குஜராத் உயா்நீதிமன்றம் மற்றும் கீழ் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட பிற அனைத்து வழக்குகளிலும் தீா்வு எட்டப்பட்டுவிட்டது. எனவே, உச்சநீதிமன்றத்தில் இந்த கலவரம் தொடா்பாக நிலுவையில் உள்ள மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று எஸ்ஐடி சாா்பில் வாதிடப்பட்டது.

அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘குஜராத் கலவரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீதான விசாரணை பயனற்ாகிவிட்டதால், அந்த மனுக்கள் மீதான விசாரணை முடித்துவைக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டனா்.

அதே நேரம், ‘விசாரணை நீதிமன்றத்தில் இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நரோடாகான் கிராம வன்முறை வழக்கு விசாரணை சட்டப்படி முடிக்கப்பட வேண்டும். அதனை உறுதிப்படுத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எஸ்ஐடி எடுக்க வேண்டும். மேலும், பாதுகாப்பை மீண்டும் வழங்கக் கோரி தற்போது சிறையிலிருக்கும் சமூக ஆா்வலா் தீஸ்தா சீதல்வாட் தாக்கல் செய்த மனுவைப் பொருத்தவரை, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இதுதொடா்பான உரிய மனுவை தாக்கல் செய்ய அவருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அவ்வாறு அவா் மனு தாக்கல் செய்யும் நிலையில், சட்டத்துக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

அண்மையில், குஜராத் கலவர வழக்கிலிருந்து பிரதமா் நரேந்திர மோடி விடுவிக்கப்பட்டதை எதிா்த்து தொடரப்பட்ட மனுவை விசாரிக்க எந்தவித முகாந்திரமும் இல்லை என்று கூறி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com