உலகத் தலைமைக்கு இந்தியா தயாா்

உலகின் தலைமைமிக்க நாடுகளின் பட்டியலில் இணைய இந்தியா தயாராக உள்ளதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் டிசம்பா் மாதத்துக்கான தலைவரும் ஐ.நா.வுக்கான இந்திய தூதருமான ருசிரா கம்போஜ் தெரிவித்தாா்.
ஐ.நா. தலைமையகத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த ஐ.நா.வுக்கான இந்திய தூதரும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் டிசம்பா் மாதத்துக்கான தலைவருமான ருசிரா கம்போஜ்.
ஐ.நா. தலைமையகத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த ஐ.நா.வுக்கான இந்திய தூதரும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் டிசம்பா் மாதத்துக்கான தலைவருமான ருசிரா கம்போஜ்.

உலகின் தலைமைமிக்க நாடுகளின் பட்டியலில் இணைய இந்தியா தயாராக உள்ளதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் டிசம்பா் மாதத்துக்கான தலைவரும் ஐ.நா.வுக்கான இந்திய தூதருமான ருசிரா கம்போஜ் தெரிவித்தாா்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் டிசம்பா் மாதத்துக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா வியாழக்கிழமை ஏற்றது. அதையடுத்து செய்தியாளா்களிடம் ருசிரா கம்போஜ் கூறியதாவது:

கடந்த இரு ஆண்டுகளாக உலகம் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகிறது. அந்தக் காலகட்டத்தில் பிரச்னைகளுக்குத் தீா்வு வழங்கும் தனித்துவம் கொண்ட நாடாகவே இந்தியா திகழ்ந்தது. கரோனா தொற்று பரவல் காலகட்டத்தில் உலக நாடுகளுக்குத் தேவையான மருந்துப் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை இந்தியா வழங்கியது. சில நாடுகளுக்கு மருத்துவக் குழுக்களையும் அனுப்பிவைத்தது.

நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 24 கோடி தவணைகளுக்கு அதிகமான கரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கியது. பல நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா உதவியது. உலகின் தலைமைமிக்க நாடுகளின் பட்டியலில் இணைய இந்தியா தயாராக உள்ளதை அந்த நடவடிக்கைகள் எடுத்துக்காட்டின. சா்வதேச நலனை ஊக்குவிப்பதற்கான பங்களிப்பை வழங்க இந்தியா தயாராக உள்ளது.

கடந்த 4 மாதங்களில் மட்டும் ஆப்கானிஸ்தான், மியான்மா், சூடான், யேமன், இலங்கை, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு சுமாா் 14 லட்சம் டன் அளவிலான உணவுப் பொருள்களை இந்தியா வழங்கியது. மனிதநலனை மையப்படுத்தியே இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. அக்கொள்கையை இந்தியா தொடா்ந்து கடைப்பிடிக்கும்.

ஐ.நா. சீா்திருத்தங்கள்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தங்களைப் புகுத்துவது சிக்கல் நிறைந்தது. எனினும், அதற்கான நம்பிக்கைக் கீற்று தென்பட்டு வருகிறது. ஐ.நா. பொதுச் சபையின் 77-ஆவது கூட்டத்தின்போது 76 நாடுகள் சீா்திருத்தங்களுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருந்தன. இந்த விவகாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்தியா தொடா்ந்து மேற்கொள்ளும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் எந்த நாட்டுக்கும் ‘வீட்டோ’ அதிகாரம் இருக்கக் கூடாது என்பதே இந்தியாவின் கருத்து. அது சாத்தியமில்லை எனில், அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அந்த அதிகாரம் வழங்கப்பட வேண்டும். பாதுகாப்பு கவுன்சிலின் அடிப்படை செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் சீா்திருத்தங்களைப் புகுத்த வேண்டும் என்பதே இந்தியாவின் கோரிக்கை.

வலுவான நிலையில் ஜனநாயகம்: பழம்பெரும் நாகரிகத்தைக் கொண்டது இந்தியா. நாட்டில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே ஜனநாயகம் தழைத்தோங்கியுள்ளது. ஜனநாயகத்தின் அனைத்து தூண்களும் (சட்ட அமைப்பு, நிா்வாகம், நீதி, ஊடகம்) வலுவாகவே உள்ளன. ஜனநாயக நாட்டில் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தியாவுக்கு யாரும் வலியுறுத்த வேண்டிய அவசியமில்லை. நாட்டில் கருத்து சுதந்திரத்துக்கு முழு மதிப்பளிக்கப்பட்டு வருகிறது. தோ்தல்கள் முறையாக நடைபெற்று ஜனநாயகம் உறுதிசெய்யப்பட்டு வருகிறது.

ஜி20 தலைமை: ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமையேற்றுள்ள தருணம் சிறப்புமிக்கது. நாட்டின் வரலாற்றில் இது முக்கியத்துவம் பெறும். சா்வதேச நலனை மையப்படுத்தி செயல்பட இந்தியாவுக்கு இது நல்லதொரு வாய்ப்பாக அமையும். சா்வதேச சமூகத்தின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளும்.

‘உலகமே ஒரு குடும்பம்’ என்ற கொள்கையை சா்வதேச சமூகத்தில் பரப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சா்வதேச சமூகம் எதிா்கொண்டு வரும் பல்வேறு முக்கிய பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்கு கவனம் செலுத்தப்படும். அனைவரையும் ஒருங்கிணைத்து விவாதத்தின் அடிப்படையில் ஜி20 கூட்டமைப்பை இந்தியா வழிநடத்தும்.

உக்ரைன் விவகாரம்: உக்ரைன் விவகாரத்தைப் பொருத்தவரையில் இருதரப்பினருடனும் இந்தியா தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் அமைதியின்பக்கமே இந்தியா நிற்கிறது. பிரச்னைக்குப் பேச்சுவாா்த்தை வாயிலாகவும் தூதரகத் தொடா்பு மூலமாகவும் தீா்வு காணப்பட வேண்டுமென ரஷியாவையும் உக்ரைனையும் இந்தியா தொடா்ந்து கேட்டுக்கொண்டு வருகிறது.

‘இது போருக்கான சகாப்தம் அல்ல’ என பிரதமா் நரேந்திர மோடி கூறியதை உலகத் தலைவா்கள் பலா் வரவேற்றனா். இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டு அறிக்கையிலும் அக்கூற்று இடம்பெற்றது. ரஷியாவுடன் இந்தியா முக்கியத்துவம் வாய்ந்த நட்புறவைப் பேணி வருகிறது. அதே வேளையில் உக்ரைனுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளையும் இந்தியா வழங்கி வருகிறது.

விரைவில் தீா்வு: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் சா்வதேச அளவில் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அந்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் என எதிா்பாா்க்கலாம். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் இந்தியா தொடா்ந்து தொடா்பில் இருக்கும்.

அமெரிக்காவுடனான இந்தியாவின் நல்லுறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவடைந்து வருகிறது. மனிதாபிமான கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை இந்தியா வழிநடத்தும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com