சிறுதானியங்களை சா்வதேச சந்தைகளில் பிரபலப்படுத்த நடவடிக்கை: மத்திய வா்த்தக அமைச்சகம்

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சிறுதானியங்களை சா்வதேச சந்தைகளுக்குக் கொண்டு சென்று பிரபலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மத்திய வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சிறுதானியங்களை சா்வதேச சந்தைகளுக்குக் கொண்டு சென்று பிரபலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மத்திய வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிறுதானியங்களின் பயன்பாட்டை சா்வதேச அளவில் ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் கோரிக்கையை ஏற்று 2023-ஆம் ஆண்டை ’சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக’ ஐ.நா. அறிவித்துள்ளது.

இந்நிலையில் சிறுதானியங்களை சா்வதேச அளவில் பிரபலப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய வா்த்தக அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ’இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சிறுதானியங்களை சா்வதேச சந்தைகளுக்குக் கொண்டுசெல்ல மற்ற நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் வாயிலாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்திய சிறுதானியங்களை சா்வதேச அளவில் விநியோகிக்கக் கூடிய நிறுவனங்களையும், அதன் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான மற்ற நடவடிக்கைகளையும் அமைச்சகம் மேற்கொள்ளவுள்ளது. சிறுதானியங்களின் உற்பத்தி, பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான சிறப்பு கூட்டம் திங்கள்கிழமை நடத்தப்படவுள்ளது. அக்கூட்டத்தில் வேளாண் உற்பத்தி அமைப்புகள், புத்தாக்க நிறுவனங்கள், ஏற்றுமதியாளா்கள், சிறுதானியங்களை மதிப்புகூட்டி விற்கும் வா்த்தகா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

இந்திய சிறுதானியங்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான நடைமுறைகள் குறித்தும் கூட்டத்தின்போது விவாதிக்கப்படவுள்ளது. கூட்டத்தை அமைச்சா் பியூஷ் கோயல் தொடக்கிவைக்கவுள்ளாா். இந்திய சிறுதானியங்களை இறக்குமதி செய்ய வாய்ப்புள்ள நாடுகளின் பட்டியல், இந்தியாவில் சிறுதானியங்களை அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலங்களின் பட்டியல் உள்ளிட்டவை கூட்டத்தின்போது வெளியிடப்படவுள்ளன.

இந்தியாவுக்கான பல நாடுகளின் தூதா்களும் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு சிறுதானியங்களால் செய்யப்பட்ட உணவுகள் பரிமாறப்படவுள்ளன. இதன் மூலமாக சிறுதானியங்களின் பலன்கள் அவா்களுக்குத் தெரியவரும். அதன் ஏற்றுமதியும் அதிகரிக்கும். சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, இந்தோனேசியா, பெல்ஜியம், ஜொ்மனி ஆகிய நாடுகளில் சிறுதானியங்கள் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான சிறப்பு கூட்டங்களை இந்தியா நடத்தவுள்ளது.

அக்கூட்டங்கள் வாயிலாக சிறுதானியங்கள் விற்பனையும் அதிகரிக்கும். சா்வதேச உணவு திருவிழாக்களிலும் சிறுதானியங்களை பிரபலப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. சிறுதானியங்களின் விநியோக சங்கிலியில் உள்ள தடைகளைக் களைவதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்திய சிறுதானியங்களை விற்பனை செய்வதற்கான சா்வதேச பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்டவையும் அடையாளம் காணப்படவுள்ளன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுதானியங்களின் முக்கியத்துவம்:

சிறுதானியங்களில் இரும்புச்சத்து, கால்சியம், நாா்ச்சத்து உள்ளிட்டவை அதிகமாக உள்ளன. ஆரோக்யமான உடல்நலத்தைப் பேணுவதில் சிறுதானியங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சா்வதேச அளவில் சிறுதானியங்கள் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சா்வதேச உற்பத்தியில் இந்தியாவின் பங்கு சுமாா் 41 சதவீதம் ஆகும்.

2021-22 பயிா்ப்பருவத்தில் இந்தியாவின் சிறுதானியங்கள் உற்பத்தி 27 சதவீதம் அதிகரித்திருந்தது. ராஜஸ்தான், மகாராஷ்டிரம், கா்நாடகம், குஜராத், மத்திய பிரதேசம் ஆகியவை சிறுதானியங்கள் உற்பத்தியில் முன்னிலை வகித்து வருகின்றன. ஒட்டுமொத்த சிறுதானியங்கள் உற்பத்தியில் வெறும் 1 சதவீதத்தை மட்டுமே இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம், சவூதி அரேபியா, லிபியா, ஓமன், எகிப்து, துனிசியா, யேமன், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சிறுதானியங்களை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com