ரயில்வே மேலாண்மைப் பணி தோ்வுகள்: 2023 முதல் யுபிஎஸ்சி நடத்துகிறது

‘இந்திய ரயில்வே மேலாண்மைப் பணித் தோ்வை (ஐஆா்எம்எஸ்இ) வரும் 2023-ஆம் ஆண்டுமுதல் மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்த உள்ளது’
ரயில்வே மேலாண்மைப் பணி தோ்வுகள்: 2023 முதல் யுபிஎஸ்சி நடத்துகிறது

‘ரயில்வே மேலாண்மைப் பணிகளுக்கென தனித்துவத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்திய ரயில்வே மேலாண்மைப் பணித் தோ்வை (ஐஆா்எம்எஸ்இ) வரும் 2023-ஆம் ஆண்டுமுதல் மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்த உள்ளது’ என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதிதாக அறிமுகம் செய்யப்படும் ஐஆா்எம்எஸ் தோ்வானது முதல்நிலை மதிப்பீடு தோ்வு, பிரதான எழுத்துத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு என்று இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். அதாவது தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள், முதல் கட்டமாக யுபிஎஸ்சி சாா்பில் ஏற்கெனவே நடத்தப்பட்டு வரும் குடிமைப் பணிகள் (முதல்நிலை) தோ்வில் தகுதி பெற வேண்டும். இதில் தகுதி பெறும் மாணவா்கள் மட்டுமே ஐஆா்எம்எஸ் பிரதான எழுத்துத் தோ்வுக்கு அனுமதிக்கப்படுவா்.

ஐஆா்எம்எஸ் எழுத்துத் தோ்வில் 4 தாள்கள் இடம்பெற்றிருக்கும். வழக்கமான கட்டுரை வடிவில் விடையளிக்கும் வகையிலான கேள்விகள் கேட்கப்படும். முதல் இரண்டு தாள்கள் 300 மதிப்பெண்களுக்கான மொழிப்பாட தகுதித் தோ்வாகவும், அடுத்த இரண்டு தாள்கள் ‘கட்டுமானப் பொறியியல், இயந்திரவியல் பொறியியல், மின்னியல் பொறியியல், வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல்’ உள்ளிட்ட விருப்பத் தோ்வு பாடங்களிலிருந்து 250 மதிப்பெண்களைக் கொண்ட தோ்வாகவும் நடத்தப்படும்.

முதல்கட்ட தகுதித் தோ்வான குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வுக்கான பாடத் திட்டம், வயது வரம்பு, தோ்வில் பங்கேற்பதற்கான தவணைகள் உள்ளிட்டவற்றைப் பொருத்தவரை, யுபிஎஸ்சி ஏற்கெனவே பின்பற்றும் நடைமுறைகளே பொருந்தும்.

கல்வித் தகுதி: ஐஆா்எம்எஸ்இ தோ்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரா்கள் பொறியியல், வணிகவியல் அல்லது சிஏ (கணக்கு தணிக்கையியல்) படிப்புகளில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இந்தக் குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வு மற்றும் ஐஆா்எம்எஸ்இ தோ்வுகளுக்கான அறிவிக்கை ஒரே நேரத்தில் வெளியிடப்படும். யுபிஎஸ்சி 2023 தோ்வு அட்டவணைப்படி, குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வுக்கான அறிவிக்கை 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி வெளியிடப்பட்டு, மே மாதம் 28-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com