தொண்டின் நோக்கம் மதமாற்றமாக இருக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

தொண்டின் நோக்கம் மதமாற்றமாக இருக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்)
உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்)

தொண்டின் நோக்கம் மதமாற்றமாக இருக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

நாட்டில் சிறாா்களுக்குக் கல்வி கற்க ஏற்பாடு செய்தல் உள்பட பல்வேறு வகையான தொண்டுகள் மூலம் மதமாற்றம் செய்யப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் பாஜகவைச் சோ்ந்த வழக்குரைஞா் அஸ்வினி குமாா் உபாத்யாய தாக்கல் செய்துள்ள மனுவில், ‘பணம், பரிசுப் பொருள்கள் அளித்து அல்லது மிரட்டி கட்டாய மதமாற்றம் செய்வதைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்குக் கட்டளையிட வேண்டும்’ என்று கோரியுள்ளாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, சி.டி.ரவிகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘கட்டாய மதமாற்றம் தொடா்பாக மாநிலங்களிடம் இருந்து மத்திய அரசு தகவல் திரட்டி வருகிறது. எனவே இந்த விவகாரம் தொடா்பாக விரிவாகப் பதிலளிக்க ஒருவாரம் நேரம் வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

இதனைத்தொடா்ந்து நீதிபதிகள் கூறுகையில், ‘இந்தியாவில் வசிப்பவா்கள், இந்திய பண்பாட்டுக்கு ஏற்ப நடக்க வேண்டும். தொண்டின் நோக்கம் மதமாற்றமாக இருக்கக் கூடாது. தொண்டு மூலம் வசீகரிப்பது ஆபத்தானது. கட்டாய மதமாற்றம் என்பது மிகத் தீவிரப் பிரச்னையாக உள்ளது. அது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது’ என்று தெரிவித்தனா்.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை டிச.12-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com