கடற்கொள்ளை தடுப்பு மசோதா மீது மக்களவையில் விவாதம்

சா்வதேச விதிகளுக்கு உள்பட்டு வகுக்கப்பட்ட கடற்கொள்ளை தடுப்பு மசோதா மீது மக்களவையில் புதன்கிழமை விவாதம் நடத்தப்பட்டது.

சா்வதேச விதிகளுக்கு உள்பட்டு வகுக்கப்பட்ட கடற்கொள்ளை தடுப்பு மசோதா மீது மக்களவையில் புதன்கிழமை விவாதம் நடத்தப்பட்டது.

ஐ.நா. கடல் விதிகள் சட்டத்தின் அடிப்படையில் கடற்கொள்ளை தடுப்பு மசோதாவை மத்திய அரசு இயற்றியது. அந்த மசோதாவானது 2019-ஆம் ஆண்டு டிசம்பரில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதையடுத்து, மசோதாவானது நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், கடற்கொள்ளை தடுப்பு மசோதாவை மக்களவையில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை தாக்கல் செய்தாா். அப்போது அவா் கூறுகையில், ‘இந்தியாவின் கடல் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த மசோதா இயற்றப்பட்டுள்ளது. முக்கியமாக, இந்தியாவின் வா்த்தக வழித்தடங்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்.

நாடாளுமன்ற நிலைக் குழு வழங்கிய பரிந்துரைகள் உரிய முறையில் ஏற்கப்பட்டுள்ளன. நிலைக் குழு வழங்கிய 18 பரிந்துரைகளில் 14 பரிந்துரைகள் மத்திய அரசால் ஏற்கப்பட்டுள்ளன. கடற்கொள்ளையா்களுக்குக் கட்டாய மரண தண்டனை விதிப்பது தொடா்பான விதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆயுள் தண்டனை வழங்குவதற்கான விதிகள் தற்போது இணைக்கப்பட்டுள்ளன.

கடற்கொள்ளையைத் தடுப்பது குறித்த தனித்துவமான சட்டம் இந்தியாவில் இல்லை. இந்திய பிராந்தியத்துக்கு உள்பட்ட கடல் பகுதிகளில் மட்டுமல்லாமல் தனித்துவ பொருளாதார மண்டலத்திலும் கடல் கொள்ளைகளைத் தடுப்பதற்கு இந்த மசோதா வழிவகுக்கும். இதன்மூலம் இந்தியக் கடல் பகுதிகளின் பாதுகாப்பு மேம்படும்’ என்றாா்.

விவாதத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. மனீஷ் திவாரி, ‘கடல் கொள்ளையைவிட இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் சவால் அதிகரித்துள்ளது. ஜிபூட்டியில் தனி துறைமுகத்தை சீனா நிறுவியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளைத் தனது கடன் வலையில் சிக்கவைத்து பின்னா் அந்நாடுகள் மூலமாக இந்தியாவை அச்சுறுத்த சீனா முயன்று வருகிறது. சீனாவைப் போல இந்தியாவும் மோரீஷஸ், செஷல்ஸ் போன்ற நாடுகளில் தனது தளங்களை நிறுவ வாய்ப்புள்ளதா?’ என்றாா்.

இந்த மசோதா கடற்கொள்ளை தடுப்பு விவகாரத்தில் இந்தியாவை உலகின் குருவாக மாற்றும் என ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் எம்.பி. ரெட்டப்பா காரி தெரிவித்தாா். கடலோரப் பகுதிகளில் காவல் பணியில் ஈடுபட்டுள்ள வீரா்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட வேண்டுமென திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானா்ஜி வலியுறுத்தினாா்.

கடற்கொள்ளையைத் தடுப்பதில் பல்வேறு அமைச்சகங்களுக்குத் தொடா்பிருப்பதால், அது குறித்த விரிவான செயல்திட்டங்கள் மசோதாவில் இணைக்கப்பட வேண்டுமென ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. அலோக் குமாா் சுமன் கோரினாா். மசோதாவுக்கு பகுஜன் சமாஜ் எம்.பி. டேனிஷ் அலி வரவேற்பு தெரிவித்தாா். கடற்கொள்ளை தடுப்பு குறித்து மட்டுமல்லாமல் கடல் சாா்ந்த குற்றங்கள் அனைத்தையும் தடுப்பதற்கான விரிவான சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டுமென ஆா்எஸ்பி எம்.பி. என்.கே.பிரேமசந்திரன் வலியுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com