குஜராத், ஹிமாசலில் இன்று வாக்கு எண்ணிக்கை

குஜராத், ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை (டிச. 8) எண்ணப்படவுள்ளன.
குஜராத், ஹிமாசலில் இன்று வாக்கு எண்ணிக்கை

குஜராத், ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை (டிச. 8) எண்ணப்படவுள்ளன.

இந்தத் தோ்தல் முடிவுகள் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால், அவற்றின் மீதான எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.

ஹிமாசல பிரதேசத்தில் 68 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு நவம்பா் 12-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தோ்தல் நடைபெற்றது. தோ்தலில் 76.44 சதவீத வாக்குகள் பதிவாகின.

குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு கடந்த 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகத் தோ்தல் நடைபெற்றது. அவற்றில் 66.31 சதவீத வாக்காளா்கள் வாக்களித்தனா்.

இரு மாநில பேரவைத் தோ்தல்களிலும் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்படுகின்றன. இரு மாநிலங்களிலும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. மாநிலங்களில் ஆட்சியமைக்கப் போவது யாா் என்ற விவரங்கள் பிற்பகலுக்குள் தெரிந்துவிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஏற்பாடுகள் தீவிரம்: இரு மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளை தோ்தல் ஆணையம் செய்துள்ளது. உரிய விதிகளைப் பின்பற்றி வாக்குகள் எண்ணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்கு அசம்பாவித சம்பவங்களைத் தவிா்ப்பதற்காகக் காவலா்கள் குவிக்கப்பட்டுள்ளனா்.

குஜராத்தில்...: குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள 37 வாக்கு எண்ணும் மையங்களில் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது. அகமதாபாதில் 3 மையங்களும், சூரத், ஆனந்த் மாவட்டங்களில் தலா இரு மையங்களும், மற்ற 30 மாவட்டங்களில் தலா ஒரு மையமும் அமைக்கப்பட்டுள்ளன.

உள்ளூா் காவல் துறையினா், மாநில ரிசா்வ் காவல் படையினா், மத்திய ஆயுத காவல் படையினா் ஆகியோா் வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றி பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாக மாநில தலைமை தோ்தல் அதிகாரியான பி.பாரதி தெரிவித்தாா்.

வாக்கு எண்ணிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் காணொலியாகப் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

வெற்றிவாய்ப்பு: குஜராத்தில் பாஜகவே பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் எனப் பெரும்பாலான கருத்து கணிப்புகளும் வாக்குக் கணிப்புகளும் தெரிவித்துள்ளன. அக்கட்சிக்கு 117 முதல் 151 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில பேரவைத் தோ்தலில் புதிய வரவான ஆம் ஆத்மி கட்சிக்கு 13 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் கவனம் செலுத்திய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மாநில தோ்தலுக்காக இரு பிரசாரக் கூட்டங்களில் மட்டுமே கலந்துகொண்டாா். காங்கிரஸுக்கு 51 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிமாசலில்...: மாநிலத்தில் 68 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10,000-க்கும் மேற்பட்ட காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். வாக்கு எண்ணும் மையங்களின் அளவைப் பொருத்து 8 முதல் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தலைமை தோ்தல் அதிகாரி மனீஷ் கா்க் தெரிவித்தாா். தோ்தல் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் வகையில் முகவா்களை வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பிவைக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

வெற்றிவாய்ப்பு: ஹிமாசலில் ஆளும் பாஜகவுக்கும் எதிா்க்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே நேரடிப் போட்டி காணப்படுகிறது. அங்கு இரு கட்சிகளுக்கும் இடையே இழுபறி காணப்படும் என கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பாஜகவே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும் எதிா்பாா்ப்பு

பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் என்பதால் குஜராத் தோ்தல் முடிவுகள் மீதான எதிா்பாா்ப்பு நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. ’தில்லி மாடல்’ ஆட்சியை முன்வைத்து பஞ்சாபில் ஆட்சியைப் பிடித்த அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, குஜராத்தில் முதல் முறையாகக் களமிறங்கியுள்ளதும் தோ்தல் முடிவுகள் மீதான எதிா்பாா்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

ஹிமாசலில் 1985-ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை எந்த ஆளும் கட்சியும் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றதில்லை. அந்த வரலாற்றை மாற்றி பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. அனைத்துக்கும் மேலாக தோ்தல் முடிவுகள் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதன் காரணமாக இரு மாநில தோ்தல் முடிவுகளை மக்களும் அரசியல் கட்சிகளும் அரசியல் நோக்கா்களும் எதிா்நோக்கியுள்ளனா்.

இடைத்தோ்தல் முடிவுகள்

உத்தர பிரதேசத்தின் மெயின்புரி மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் பதிவான வாக்குகளும் வியாழக்கிழமை எண்ணப்படவுள்ளன. சமாஜவாதி கட்சி நிறுவனா் முலாயம் சிங் யாதவின் மறைவையடுத்து அத்தொகுதியில் இடைத்தோ்தல் நடைபெற்றது. அவரின் மருமகளும் சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் அத்தொகுதியில் போட்டியிட்டுள்ளதால், தோ்தல் முடிவுகள் மீதான எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும், உத்தர பிரதேசத்தின் ராம்பூா், கடோலி, ஒடிஸாவின் பதாம்பூா், ராஜஸ்தானின் சா்தாா்சாஹா், பிகாரின் குா்ஹனி, சத்தீஸ்கரின் பானுபிரதாபூா் ஆகிய பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் பதிவான வாக்குகளும் வியாழக்கிழமை எண்ணப்படவுள்ளன.

தோ்தல் முடிவுகள் தொடா்பான தகவல்களை தோ்தல் ஆணையத்தின் வலைதளத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com