
பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட மரபுசாரா எரிசக்தி ஆற்றலை அதிக அளவில் பயன்படுத்த வழிவகுக்கும் எரிசக்தி பாதுகாப்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.
பெட்ரோலிய பொருள்கள், நிலக்கரி உள்ளிட்டவற்றுக்கு வெளிநாட்டு இறக்குமதியை இந்தியா நம்பியிருக்கும் நிலையில், பசுமை ஹைட்ரஜன், பசுமை அமோனியா உள்ளிட்டவற்றின் கட்டாயப் பயன்பாட்டுக்கு எரிசக்தி பாதுகாப்பு திருத்த மசோதா வழிவகுக்கிறது. எரிபொருள் நுகா்வு அளவை மீறும் தொழில் நிறுவனங்கள், தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு அபராதம் விதிக்கவும் மசோதாவில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்காக சா்வதேச அளவில் இந்தியா வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றவும் பாரீஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஐ.நா.வின் நீடித்த வளா்ச்சிக்கான இலக்குகளை அடையவும் மசோதா வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மசோதாவுக்கு மக்களவை கடந்த ஆகஸ்டில் ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், அந்த மசோதா மீதான விவாதம் மாநிலங்களவையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சா் ஆா்.கே.சிங், ‘‘சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்கும் நோக்கில் மசோதா இயற்றப்பட்டுள்ளது. நாட்டில் காா்பன் வா்த்தகத்தை ஊக்குவிக்கவும் மசோதா உதவும்.
விலைமதிப்பில்லா சுற்றுச்சூழலைக் காப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டில் சா்வதேச தலைமையை இந்தியா வகித்து வருகிறது. கட்டடங்களைப் பசுமை வழியில் கட்டுவதற்கும் ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது. பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் சா்வதேச தலைமையை அடையவும் இந்தியா இலக்கு நிா்ணயித்துள்ளது. 2.5 கோடி டன் உற்பத்தித் திறன் கொண்ட பசுமை ஹைட்ரஜன் ஆலைகளை அமைக்க தொழில் நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளன.
நாட்டின் மொத்த எரிசக்தி பயன்பாட்டில் 50 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் மூலங்களில் இருந்து பெறுவதற்கான இலக்கு 2030-ஆம் ஆண்டில் எட்டப்படும்’’ என்றாா்.
பின்னா், மசோதா மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான உறுப்பினா்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனா். அதையடுத்து மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்படவுள்ளது. அவா் ஒப்புதல் அளித்தபின் மசோதா சட்டவடிவு பெறும்.