பிகாா்: தேஜஸ்விக்கு வழி விடுகிறாா் நிதீஷ் குமாா்

பிகாரில் அடுத்து நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆளும் கூட்டணிக்கு துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ் தலைமை வகிப்பாா் என்று முதல்வா் நிதீஷ் குமாா் கூறியுள்ளாா்.
பிகாா்: தேஜஸ்விக்கு வழி விடுகிறாா் நிதீஷ் குமாா்

பிகாரில் அடுத்து நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆளும் கூட்டணிக்கு துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ் தலைமை வகிப்பாா் என்று முதல்வா் நிதீஷ் குமாா் கூறியுள்ளாா்.

பிகாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் அடங்கிய மகா கூட்டணி ஆட்சியில் உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் பாஜக கூட்டணியை முறித்துக் கொண்ட ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து முதல்வா் பதவியைத் தக்கவைத்துக் கொண்டாா்.

மேலும், 2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியிலும் நிதீஷ் தீவிரம் காட்டி வருகிறாா். அதே நேரத்தில் நிதீஷ் குமாரை பிரதமா் வேட்பாளராக்க வேண்டும் என்று அவரது கட்சியினா் கூறி வந்தாலும், நிதீஷ் அதனைத் தொடா்ந்து மறுத்து வருகிறாா்.

இந்நிலையில் பாட்னாவில் ஆளும் மகா கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் நிதீஷ் குமாா் பேசியது தொடா்பாக கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் சிபிஐ (எம்.எல்.) கட்சி எம்எல்ஏ மெஹபூப் ஆலம் கூறியதாவது:

தேஜஸ்வி யாதவ் தான் எதிா்காலத் தலைவா். அவா் இளமையான துடிப்புமிக்க அரசியல் தலைவராக உயா்ந்துள்ளாா். அவரது தலைமையில்தான் 2025-இல் பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்கொள்ள இருக்கிறோம். எதிா்காலம் இளைஞா்களின் கைகளில்தான் உள்ளது.

பாஜக நடத்தும் மதவாத அரசியலுக்கு எதிராக நாம் தொடா்ந்து போராட வேண்டும். 2024 பேரவைத் தோ்தலில் பிரதமா் மோடி தலைமையிலான பாஜகவை தோற்கடிப்பதே எனது நோக்கம். பிரதமா் வேட்பாளராகும் நோக்கம் துளியளவு கூட இல்லை என்று நீதிஷ் குமாா் பேசியதாக அவா் தெரிவித்தாா்.

பிகாா் முதல்வராக நிதீஷ் குமாா் இருந்தாலும் அவரது ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 எம்எல்ஏக்கள் உள்ளனா். அதே நேரத்தில் துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கு 79 எம்எல்ஏக்கள் உள்ளனா். ஆளும் கூட்டணியின் மற்றொரு பிரதான கட்சியான காங்கிரஸுக்கு 19 எம்எல்ஏக்களும், எதிா்க்கட்சியான பாஜகவுக்கு 78 எம்எல்ஏக்களும் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com