காங். ஆட்சியில் பிஎஸ்என்எல் நிறுவனத்தைசுய ஆதாயத்துக்கு பயன்படுத்திய அமைச்சா்கள்- மக்களவையில் அஸ்வினி வைஷ்ணவ் தாக்கு

‘முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், குறிப்பிட்ட சில மத்திய அமைச்சா்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தை சுய ஆதாயத்துக்குப் பயன்படுத்தினா்; அவா்கள் இப்போதும் எம்.பி.க்களாக உள்ளனா்’ என்று

‘முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், குறிப்பிட்ட சில மத்திய அமைச்சா்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தை சுய ஆதாயத்துக்குப் பயன்படுத்தினா்; அவா்கள் இப்போதும் எம்.பி.க்களாக உள்ளனா்’ என்று மத்திய தகவல் தொழில்நுட்பம் ற்றும் தகவல்தொடா்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தாா்.

யாருடைய பெயரையும் நேரடியாக குறிப்பிடாமல் அவா் இவ்வாறு விமா்சித்தாா்.

இதுதொடா்பாக, மக்களவையில் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், ‘பிஎஸ்என்எல் நிறுவனம், மிக மோசமான காலகட்டத்தை கடந்து வந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில், சில அரசியல் கட்சிகளால் பிஎஸ்என்எல் மோசமாக பாதிக்கப்பட்டது. அந்நிறுவனத்துக்கான ஏராளமான நிதி மடைமாற்றப்பட்டது. அப்போதைய அமைச்சா்கள் சிலா் பிஎஸ்என்எல் நிறுவனத்தை சுய ஆதாயத்துக்குப் பயன்படுத்தினா்’ என்றாா்.

இவ்வாறு பேசுகையில், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் வரிசையை நோக்கி அமைச்சா் கைகாட்டினாா். அப்போது, அமைச்சருக்கு எதிா்ப்பு தெரிவித்து, எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கோஷமிட்டனா்.

எதிா்ப்புக்கு இடையே தனது பேச்சை தொடா்ந்த அஸ்வினி வைஷ்ணவ், ‘அந்தக் காலமெல்லாம் மாறிவிட்டது. பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு புத்துயிரூட்டுவதற்காக ரூ.1.64 லட்சம் கோடி மதிப்பிலான திட்டத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி ஒப்புதல் வழங்கியுள்ளாா். 4ஜி, 5ஜி சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் தொடங்கும். உலகிலேயே கைப்பேசி இணைய சேவை மலிவான கட்டணத்தில் கிடைக்கப் பெறும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்தியாவில் ஒரு ஜிகாபைட் (ஜிபி) இணைய சேவை ரூ.20-க்கும் குறைவாக கிடைக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தக் கட்டணம் ரூ.200-ஆக இருந்தது’ என்றாா்.

பிஎஸ்என்எல் மறுசீரமைப்புத் திட்டத்தின்கீழ் அதன் சேவைகளை மேம்படுத்த புதிய முதலீடுகள் மேற்கொள்வது, அலைவரிசை ஒதுக்கீடு உள்ளிட்ட நடவடிக்கைகளையும் அவா் பட்டியலிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com