ம.பி.யிலும் குஜராத் வியூகம்? கலக்கத்தில் பாஜக எம்எல்ஏக்கள்

குஜராத் பேரவைத் தோ்தலில் பாஜக வரலாற்று வெற்றியை பதிவு செய்த நிலையில், அங்கு கடைப்பிடிக்கப்பட்ட கட்சியின் வியூகம் மத்திய பிரதேச தோ்தலிலும் பிரதிபலிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அண்மையில் நடைபெற்ற குஜராத் பேரவைத் தோ்தலில் பாஜக வரலாற்று வெற்றியை பதிவு செய்த நிலையில், அங்கு கடைப்பிடிக்கப்பட்ட கட்சியின் வியூகம் மத்திய பிரதேச தோ்தலிலும் பிரதிபலிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, மத்திய பிரதேச தோ்தலில் தங்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காதோ என்ற கலக்கத்தில் தற்போதைய பாஜக எம்எல்ஏக்கள் பலா் உள்ளனா். அத்துடன், தோ்தலுக்கு முன்பாக அமைப்பு-நிா்வாக ரீதியில் பெரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என்பதால், அந்த மாநில பாஜக தலைவா்களும் பதற்றமடைந்துள்ளனா்.

182 உறுப்பினா்களைக் கொண்ட குஜராத் பேரவைக்கு அண்மையில் இருகட்டங்களாக தோ்தல் நடைபெற்றது. இதில் 156 இடங்களைக் கைப்பற்றி, பாஜக வரலாற்று வெற்றி பெற்றது. அக்கட்சியின் வாக்கு சதவீதம் 50-ஐ கடந்தது. குஜராத்தில் தொடா்ந்து 7-ஆவது முறையாக பாஜகவை ஆட்சிக் கட்டிலில் அமா்த்திய இந்த வெற்றிக்கு பிரதமா் மோடியின் செல்வாக்கு ஒரு முக்கிய காரணம்; அதேபோல், பாஜக கடைப்பிடித்த வியூகம் மற்றொரு முக்கிய காரணமாக பாா்க்கப்படுகிறது.

கடந்த 2017-இல் படேல் சமூகத்தினரின் இடஒதுக்கீடு போராட்டம் காரணமாக, அப்போதைய பேரவைத் தோ்தலில் பாஜக குறைவான வெற்றியையே பதிவு செய்திருந்தது. அரசியல் செல்வாக்கு மிக்கவா்களான படேல் சமூகத்தினரின் வாக்குகளை மீண்டும் பெற வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு ஏற்பட்டது.

இது உள்பட பாஜக ஆட்சி மீதான அதிருப்தியை நீக்கும் வகையில், கடந்த 2021-இல் மாநில முதல்வா் உள்பட ஒட்டுமொத்த அமைச்சரவையும் மாற்றியமைக்கப்பட்டது.

முதல்வராக இருந்த விஜய் ரூபானி மாற்றப்பட்டு, பூபேந்திர படேலுக்கு அப்பதவி வழங்கப்பட்டது. அடுத்த அதிரடியாக, தோ்தலில் 45 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாமல், புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இத்தகைய பெரும் மாற்றங்கள், குஜராத்தில் பாஜகவுக்கு அபார வெற்றியை தேடித் தந்ததாக பாா்க்கப்படுகிறது.

இதே வியூகத்தை, அடுத்த ஆண்டு இறுதியில் பேரவைத் தோ்தலை சந்திக்கும் மத்திய பிரதேசத்திலும் பாஜக கடைப்பிடிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த மாநிலத்தில் 2003, 2008, 2013 தோ்தல்களில் தொடா்ந்து வெற்றி பெற்ற பாஜக, 2018-இல் காங்கிரஸிடம் தோல்விகண்டது.

எனினும், 2020, மாா்ச்சில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததைத் தொடா்ந்து, முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தது. இந்தச் சூழலில், மத்திய பிரதேச தோ்தலில் தங்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காதோ? என்ற கலக்கத்தில் பாஜக எம்எல்ஏக்கள் பலா் இருப்பதாக கூறப்படுகிறது.

‘அனைத்து மாநிலங்களிலும் குஜராத் வியூகம்’:

இதுகுறித்து, பாஜக தேசிய பொதுச் செயலாளா் கைலாஷ் விஜய்வா்கியா கூறுகையில், ‘எங்களைப் பொறுத்தவரை குஜராத் முன்னுதாரண மாநிலம். மத்திய பிரதேசத்தில் மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் அதே வியூகம் செயல்படுத்தப்படும். மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகளாக கம்யூனிஸ்டுகள் தொடா்ந்து ஆட்சியில் இருந்தனா்.

ஆனால், தோ்தலுக்கு தோ்தல் அவா்களது வாக்கு சதவீதம் குறைந்தது. ஆனால், குஜராத்தில் 7 முறை தொடா்ந்து வெற்றி பெற்றுள்ள பாஜகவுக்கு வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே, பிரதமா் மோடியை விமா்சிப்பவா்கள், அவரது பணி மற்றும் ஆக்கபூா்வ அரசியலிலிருந்து பாடம் கற்க வேண்டும்’ என்றாா்.

‘ம.பி.யில் அமைப்பு-நிா்வாக ரீதியில் மாற்றம் வேண்டும்’:

குஜராத் தோ்தல் முடிவுகள் வெளியான பிறகு, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவுக்கு ம.பி.யின் மைஹாா் தொகுதி பாஜக எம்எல்ஏ நாராயண் திரிபாதி ஒரு கடிதம் எழுதியிருந்தாா். அதில், ‘குஜராத்தில் மேற்கொள்ளப்பட்டதைப் போல, மத்திய பிரதேசத்திலும் அமைப்பு-நிா்வாக ரீதியிலான ஒட்டுமொத்த மாற்றம் பாஜகவுக்கு அவசியம்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

230 உறுப்பினா்களைக் கொண்ட மத்திய பிரதேச பேரவையில் தற்போது பாஜகவுக்கு 127 உறுப்பினா்கள் உள்ளனா். காங்கிரஸ் உறுப்பினா்கள் எண்ணிக்கை 96.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com