‘கர்நாடகத்திற்குள் நுழைவோம்’: சிவசேனை எம்பி சஞ்சய் ரெளத் பரபரப்பு பேச்சு

இரு மாநில எல்லைப் பிரச்னையில் மகாராஷ்டிரம், கர்நாடக அரசியல் தலைவர்கள் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. 
சஞ்சய் ரெளத்
சஞ்சய் ரெளத்

இரு மாநில எல்லைப் பிரச்னையில் மகாராஷ்டிர, கர்நாடக அரசியல் தலைவர்கள் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. 

1957-ஆம் ஆண்டு மொழிவாரியாக கா்நாடக-மகாராஷ்டிர மாநிலங்கள் பிரிக்கப்பட்டதில் இருந்து இரு மாநிலங்களுக்கு இடையே எல்லை கிராமங்கள் தொடா்பான பிரச்னை நிலவி வருகிறது.

குறிப்பாக கா்நாடகத்தில் உள்ள பெலகாவி நகருக்கும், அந்த மாநிலத்தில் உள்ள 814 மராத்தி மொழி பேசும் மாநிலங்களுக்கும் மகாராஷ்டிரம் உரிமைக் கோரி வரும் நிலையில் கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை, மகாராஷ்டிரத்தில் உள்ள அக்கல்கோட் மற்றும் சோலாப்பூா் மாவட்டத்தில் உள்ள கன்னடம் பேசும் மக்கள் வாழும் பகுதிகள் கா்நாடகத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த கருத்து பூதாகரமானது. 

இதைத் தொடா்ந்து ஓய்ந்திருந்த மகாராஷ்டிர - கா்நாடக எல்லைப் பிரச்னை மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக பெலகாவிக்கு செல்வதாக மகாராஷ்டிர அமைச்சா்கள் தெரிவித்த நிலையில் இதற்கு கர்நாடக அரசு தடை விதித்தது. 

இந்த விவகாரத்தை முன்வைத்து இரு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த விவகாரத்தில் மகாராஷ்டிர மாநில வாகனங்கள் கர்நாடகத்தில் தாக்கப்பட்டது சிக்கலை மேலும் தீவிரப்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து இருமாநில முதல்வர்களையும் அழைத்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த விவகாரத்தில் சுமூகமான முறையில் தீர்வு காணப்படும் எனத் தெரிவித்தார். எனினும் இருமாநில தலைவர்களும் சர்ச்சைக்குரிய பகுதிக்கு தொடர்ந்து உரிமைகோரி வருகின்றனர். 

இந்நிலையில் வியாழக்கிழமை பேசிய சிவசேனை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ரெளத், “சீனா இந்தியாவிற்குள் ஊடுருவியதைப் போல் நாங்களும் கர்நாடகத்திற்குள் நுழைவோம். எங்களுக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. நாங்கள் இந்த சிக்கலை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க விரும்புகிறோம். ஆனால் கர்நாடக முதல்வர் மேலும் இதனை தீவிரப்படுத்துகிறார். மகாராஷ்டிரத்தில் உள்ள பலவீனமான அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை” எனக் கூறினார். 

இதற்கு பதிலளித்துள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, “சஞ்சய் ரெளத் நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கிறார். அவர் சீனாவிற்கு ஆதரவானவரா என்கிற சந்தேகம் எழுகிறது. அவர் சீனாவின் தரகராக செயல்படுகிறார். அவர் ஒரு துரோகி. இப்படியே பேசினால் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கையை நாங்கள் எடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார். 

எல்லைப் பிரச்னையில் இரு மாநிலத் தலைவர்கள் தொடர்ந்து மோதிக் கொள்வது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com