‘ராகுல் நடைப்பயணத்தை நிறுத்தவே கரோனா நாடகம்’: காங்கிரஸ் சாடல்

பாரத் ஜோடோ நடைப்பயணத்தை நிறுத்தவே இந்த கரோனா நாடகம் உருவாக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் விமர்சித்துள்ளார்.
கே.சி.வேணுகோபால் (கோப்புப் படம்)
கே.சி.வேணுகோபால் (கோப்புப் படம்)

பாரத் ஜோடோ நடைப்பயணத்தை நிறுத்தவே இந்த கரோனா நாடகம் உருவாக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் விமர்சித்துள்ளார்.

வரும் 2024 மக்களவை தேர்தலையொட்டி, நாடு முழுவதும் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் வகையில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை(பாரத் ஜோடோ யாத்ரா) காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7-ல் தொடங்கிய பயணம் கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து தலைநகர் தில்லியில் நடைபெற்று வருகின்றது.

இதற்கிடையே, பல்வேறு நாடுகளில் கரோனா மீண்டும் பரவி வருவதால், இந்தியா முழுவதும் கரோனா நெறிமுறைகளை பின்பற்ற மத்திய சுகாதாரத்துறை தரப்பில் கடந்த வாரம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. தொடர்ந்து, நாடு முழுவதும் இன்று கரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.

கரோனா பரவலால் ராகுல் காந்தியின் ஒற்றுமைக்கான நடைப்பயணத்தில் கரோனா நெறிமுறைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்றும் விதிமுறைகளை மீறினால் நடைப்பயணம் நிறுத்தப்படும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கேசி வேணுகோபால் கூறுகையில், கரோனா நிலையை நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம். ஆனால், இந்த ஒட்டுமொத்த நாடகமும் நடைப்பயணத்தை நிறுத்த உருவாக்கப்பட்டது.

சீனாவிலிருந்து விமானங்கள் வந்துகொண்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்திய நெறிமுறைகள் தேசிய அளவில் பின்பற்றவில்லை. பிரதமர் நரேந்திர மோடி பொது கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். ஆனால், அவருக்கு எந்த கடிதமும் அனுப்பப்படவில்லை என்றார்.

ராகுல் காந்தியின் நடைப்பயணம் நூறு நாள்களை கடந்துள்ள நிலையில், புத்தாண்டையொட்டி ஜனவரி 2 வரை ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும் நடைப்பயணம் காஷ்மீர் நோக்கி பயணிக்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com