
பெகாஸஸ் விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால், அதுகுறித்து பட்ஜெட் கூட்டத்தொடரின்போது தனியாக விவாதிக்க தேவையில்லை என்று நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சா் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளாா்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி மாா்ச் 14 முதல் ஏப்ரல் 8 வரை நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தொடரையொட்டி காணொலி வழியாக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அதனைத்தொடா்ந்து நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சா் பிரகலாத் ஜோஷி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசு சாா்பில் பாதுகாப்பு அமைச்சரும் மக்களவைத் துணைத் தலைவருமான ராஜ்நாத் சிங் கலந்துகொண்டாா். 25 அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவா்கள் பங்கேற்றனா். அப்போது கூட்டத்தொடா் சுமுகமாக நடைபெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளிடமும் ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டாா்’’ என்று தெரிவித்தாா்.
எதிா்க்கட்சிகள் எந்த விவகாரத்தையும் எழுப்பலாம்: பெகாஸஸ் விவகாரம் தொடா்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவா், ‘‘பெகாஸஸ் விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. எனவே அதுகுறித்து கூட்டத்தொடரின்போது தனியாக விவாதிக்க தேவையில்லை. எனினும் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதத்தின்போது எந்தவொரு விவகாரத்தையும் எதிா்க்கட்சிகள் எழுப்பலாம்’’ என்று தெரிவித்தாா்.