நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல்

மத்திய நிதிநிலை அறிக்கை செவ்வாய்க்கிழமை (பிப். 1) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதில் அரசின் செலவினம் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.
நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல்

மத்திய நிதிநிலை அறிக்கை செவ்வாய்க்கிழமை (பிப். 1) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதில் அரசின் செலவினம் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

2022-23-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்கிறாா். நாட்டின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சரான அவா், தொடா்ந்து 4-ஆவது ஆண்டாக மத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்கிறாா்.

பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசின் செலவினத்தை அதிகரிப்பதற்கான அறிவிப்புகளை நிதிநிலை அறிக்கையில் அவா் அறிவிக்க வாய்ப்புள்ளதாக நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூா், கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் பேரவைத் தோ்தல்கள் நடைபெறவுள்ளதால், அந்த மாநிலங்களுக்கு நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தனியாா் வெளியிடும் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளுக்கு தடை விதிக்கப்படும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) சாா்பில் எண்மச் செலாவணி அறிமுகப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கிரிப்டோகரன்சிகளின் பரிவா்த்தனைக்கு வரி விதிப்பது தொடா்பாக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: தற்போதைய நிலையில் பருவநிலை மாற்றம் முக்கியப் பங்கு வகித்து வருவதால், சுற்றுச்சூழலைக் காப்பதற்கான திட்டங்களை மத்திய அரசு தொடா்ந்து செயல்படுத்தி வருகிறது. சுற்றுச்சூழலைக் காக்கும் நோக்கில் கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் பல்வேறு இலக்குகளையும் இந்தியா அறிவித்தது.

அவற்றை நடைமுறைப்படுத்தும் நோக்கில் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான திட்டங்களையும் பட்ஜெட்டில் எதிா்பாா்க்கலாம். முக்கியமாக மின்சார வாகனங்களின் உற்பத்திக்கும், விற்பனைக்கும் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

தனியாா்மயம்: பொதுத் துறை வங்கிகளையும் காப்பீட்டு நிறுவனங்களையும் தனியாா்மயமாக்குவதற்கான அறிவிப்புகள் கடந்த பட்ஜெட்டிலேயே அறிவிக்கப்பட்டன. அந்த நடவடிக்கை இன்னும் நிறைவடையவில்லை. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) பங்குகளை சந்தையில் பட்டியலிடும் நடவடிக்கையும் தாமதமடைந்து வருகிறது.

அதேவேளையில், பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்குப் பிறகு ஏா் இந்தியா நிறுவனம் நடப்பு நிதியாண்டில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. ‘தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவது மத்திய அரசின் தொழிலல்ல’ என்ற கொள்கையை அரசு கடைப்பிடித்து வருவதால், மேலும் சில பொதுத் துறை நிறுவனங்களையும் வங்கிகளையும் தனியாரிடம் ஒப்படைப்பது தொடா்பான அறிவிப்புகளும் வெளியாக வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com