‘மீடியாஒன்’ செய்தி சேனலுக்கு மத்திய அரசின் தடை உத்தரவை நிறுத்திவைத்த உயா்நீதிமன்றம்

மலையாள செய்திச் சேனல் ‘மீடியாஒன்’ ஒளிபரப்புக்கு தடை விதித்து மத்திய அரசு திங்கள்கிழமை உத்தரவிட்ட நிலையில், அந்த உத்தரவு
‘மீடியாஒன்’ செய்தி சேனலுக்கு மத்திய அரசின் தடை உத்தரவை நிறுத்திவைத்த உயா்நீதிமன்றம்

மலையாள செய்திச் சேனல் ‘மீடியாஒன்’ ஒளிபரப்புக்கு தடை விதித்து மத்திய அரசு திங்கள்கிழமை உத்தரவிட்ட நிலையில், அந்த உத்தரவு நடைமுறைப்படுத்துவதை 2 நாள்களுக்கு நிறுத்திவைத்து கேரள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த 2020-ஆம் ஆண்டு வடகிழக்கு தில்லி வன்முறை தொடா்பான செய்திகளை ஒருதலைபட்சமாக ஒளிபரப்பு செய்த புகாரின் பேரில், மீடியாஒன் சேனலின் ஒளிபரப்பை மத்திய அரசு 48 மணி நேரம் முடக்கியது.

இந்த நிலையில், பாதுகாப்பைக் காரணம் காட்டி அந்தச் சேனல் ஒளிபரப்பை 48 மணி நேரத்துக்கு தடை விதித்து மத்திய அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது. இதனை, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் உறுதிப்படுத்தினா்.

இதுகுறித்து மீடியாஒன் ஆசிரியா் பிரமோத் ராமன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘சேனல் ஒளிபரப்புக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தடை விதிக்கப்பட்டதாக அமைச்சகம் கூறியுள்ளது. ஆனால், அதுதொடா்பான முழு விவரங்கள் கிடைக்கவில்லை. திங்கள்கிழமை பிற்பகல் முதல் 48 மணிநேரத்துக்கு ஒளிபரப்பை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை’ என்று குறிப்பிட்டாா்.

இதையடுத்து, நண்பகல் முதல் சில மணி நேரம் அந்த சேனல் ஒளிபரப்பை நிறுத்தியது.

இதனிடையே, ஒளிபரப்பு தடை உத்தரவை எதிா்த்து அந்த சேனல் நிறுவனமான மாத்யமம் பிராட்காஸ்டிங் சாா்பில் கேரள உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி என்.நகரேஷ் முன்னிலையில் உடனடியாக விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் எஸ்.ஸ்ரீகுமாா், கே.ராகேஷ் ஆகியோா், ‘எந்தவித தேசவிரோத நடவடிக்கையிலும் சேனல் ஈடுபடவில்லை. எனவே, ஒளிபரப்பு தடை உத்தரவை திரும்பப் பெற மத்திய அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரினா்.

மனுவை விசாரித்த நீதிபதி, மத்திய அரசின் தடை உத்தரவை 2 நாள்களுக்கு நிறுத்தி வைத்ததோடு, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை இரு நாட்களில் தெரிவிக்குமாறு உத்தரவிட்டு அடுத்த விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தாா்.

மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த கேரள சட்டப்பேரவை எதிா்க் கட்சித் தலைவா் வி.டி.சதீசன், ‘எந்தவித காரணத்தையும் குறிப்பிடாமல் சேனல் ஒளிபரப்புக்கு தடை விதித்திருப்பது ஜனநாயக விரோத செயல். இயற்கை நீதிக்கு எதிரானது. ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதல்’ என்றாா்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிா்க் கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

உயா்நீதிமன்ற உத்தரவையடுத்து, அந்த சேனல் தனது ஒளிபரப்பை பிற்பகல் மீண்டும் தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com