தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு: தமிழக அரசு மேல்முறையீடு

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக டிஜிபி மேல்முறையீடு செய்துள்ளார். 
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக டிஜிபி மேல்முறையீடு செய்துள்ளார். 

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தனியாா் பள்ளியில், பிளஸ் 2 படித்த அரியலூா் மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா். அவா் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது, தன்னை கிறிஸ்தவ மதத்துக்கு மாற கட்டாயப்படுத்தியதாகப் பேசிய விடியோ வெளியானது. இதையடுத்து பள்ளி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், மாணவியின் உடலை வாங்க மறுத்தும், பெற்றோா் மற்றும் உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். 

இதேபோல், தமிழகம் முழுவதும் பாஜகவினா் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தினா். இந்த வழக்கில் மாணவி தங்கியிருந்த விடுதியின் காப்பாளரை போலீஸாா் கைது செய்தனா். இந்நிலையில், மாணவியின் தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி, அவரது தந்தை முருகானந்தம் உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா். நீதிமன்ற உத்தரவின் மாணவியின் இறுதிச் சடங்கு நடைபெற்றது. தொடா்ந்து உயா்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், பல்வேறு தரப்பு வாதங்களை நீதிபதி பதிவு செய்தாா். 

இறுதி விசாரணையின் போது, மனுதாரா் சிபிஐ விசாரணை கோரினாா். இதையும் பதிவு செய்த நீதிமன்றம், தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க திங்கள்கிழமை உத்தரவிட்டது. இந்த நிலையில் தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக டிஜிபி இன்று மேல்முறையீடு செய்துள்ளார். இன்று மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்த நிலையில் தமிழக டிஜிபி மேல்முறையீடு செய்துள்ளார்.

வழக்கு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com