வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இந்திய இளைஞர்கள்
வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இந்திய இளைஞர்கள்

வேலையின்றி தவிக்கும் 3 கோடி இளைஞர்கள்: கட்டுக்குள் வருமா வேலைவாய்ப்பின்மை?

கரோனா சூழலுக்குப் பிறகு நாட்டில் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கரோனா சூழலுக்குப் பிறகு நாட்டில் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கரோனா தொற்று பேரிடருக்கு பிறகான இந்திய நிலைமையில் பல்வேறு மாற்றங்கள் நடந்துள்ளன. தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு நடவடிக்கை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதித்தது. பலரும் வேலையிழந்தும், குறைந்த ஊதியத்திற்கு பணியமர்த்தப்படும் சூழலும் நிகழ்ந்தது.

இந்நிலையில் நாடு முழுவதும் கரோனா பேரிடர் காலத்திற்குப் பிறகு இளைஞர்கள் வேலையின்றி தவித்து வருவதாக சமீபத்தில் வெளியாகிய தரவுகள் தெரிவிக்கின்றன. 

உலக வங்கியின் அறிக்கையின்படி 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 46 சதவிகிதமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவையே சீனாவில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 67 சதவிகிதமாகவும், இந்தோனேஷியாவில் 66 சதவிகிதமாகவும், மலேசியாவில் 64 சதவிகிதமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார தரவு மற்றும் பகுப்பாய்வு மையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி 2021ஆம் ஆண்டில் 20 முதல் 29 வயதுக்குட்பட்ட 3 கோடி இந்திய இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளது தெரியவந்துள்ளது. இந்திய மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்குள்ள இளைஞர்கள் வேலைக்கு உத்தரவாதமின்றி பாதிப்பிற்குள்ளாகி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா சூழலில் மட்டுமல்லாமல் அதற்கு முந்தைய காலத்தில் நாட்டில் நிலவிய பொருளாதார சூழலினால் ஆண்டுதோறும் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்தவண்ணமே இருந்துள்ளது. 

டிசம்பர் மாதத்தைப் பொருத்தவரையில் 2017-18ஆம் நிதியாண்டில் 4.7 சதவிகிதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் 2018-19ஆம் ஆண்டில் 6.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பரில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.91 சதவிகிதமாக இருந்த நிலையில் தற்போது (ஜனவரியில்) 6.57 சதவிகிதத்திற்கு குறைந்துள்ளது. 

2020-21ஆம் நிதியாண்டில் முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 45 லட்சம் ஆண்களும், 30 லட்சம் பெண்களும் வேலையிழந்துள்ளனர்.

நாட்டில் அதிகபட்சமாக வேலைவாய்ப்பின்மை விகிதத்தில் ஹரியாணா  23.4 சதவிகிதத்துடன் முன்னணியில் உள்ளது.  அதனைத் தொடர்ந்து 18.9 சதவிகிதத்துடன் ராஜஸ்தானும், 17.1 சதவிகிதத்துடன் திரிபுராவும், 15 சதவிகிதத்துடன் ஜம்மு காஷ்மீரும் உள்ளன.

தற்போதைய நிலையில் வேலைவாய்ப்பின்மை விகிதம் மெல்ல மீளத் தொடங்கியிருந்தாலும் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் நம்பிக்கை தரும் விதமாக அமையவில்லை என்பதே நிதர்சனமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com