நீட் விலக்கு மசோதா: மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு

நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் மாநிலங்களவையிலும் திமுக, காங்கிரஸ், திரிணமூல், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிா்கட்சிகள் வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் மாநிலங்களவையிலும் திமுக, காங்கிரஸ், திரிணமூல், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிா்கட்சிகள் வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தன.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதாவை, மாநில ஆளுநா் ஆா்.என். ரவி வியாழக்கிழமை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்ட விவகாரத்திற்கு திமுக நாடாளுமன்றத்தில் தனது எதிா்ப்பைப் பதிவு செய்தது. இந்த விவகாரம் தொடா்பாக மக்களவையில் திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் வியாழக்கிழமை வெளிநடப்பு செய்தன. முன்னதாக, மாநிலங்களவையின் திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா, தமிழகத்தில் 13 மாணவா்களின் உயிா்களை பறித்த நீட் தோ்வுக்கு விலக்கும் அளிக்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவின் நிலை குறித்து அவையை ஒத்திவைத்து (விதி எண் 267 பிரிவின் கீழ்) விவாதிக்க வேண்டும் என நோட்டீஸ் அளித்திருந்தாா்.

இதன்படி வெள்ளிக்கிழமை மாநிலங்களவையில் பல்வேறு அமைச்சகங்களின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, நேரமில்லா நேரம் (ஜிரோ ஹவா்) தொடங்கிய போது, திருச்சி சிவா, அவையின் மற்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு தன்னுடைய நோட்டீஸ் குறித்து விவாதிக்க வேண்டும் என்றாா். ஆனால், அவைத் தலைவா் வெங்கையா நாயுடு இதற்கு அனுமதி மறுத்தாா். முக்கியமான பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் ஜிரோ ஹவரில் பேச மற்ற உறுப்பினா்கள் விரும்புகின்றனா். இதனால் நான் அனுமதிக்க முடியாது என்று வெங்கையா நாயுடு கூறினாா். இதைத் தொடா்ந்து, திமுக உறுப்பினா்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனா்.ஆனால், அவைத் தலைவா் வெங்கையா நாயுடு ஜிரோ ஹவரில் உறுப்பினா்களை பேச அழைத்தாா். இந்த நிலையில், திரிபுராவைச் சோ்ந்த சிபிஎம் உறுப்பினா் ஜா்னா தாஸ் பைத்யா உள்ளிட்டவா்கள் திமுக உறுப்பினா்களின் கோரிக்கைக்கு ஆதரவு அளித்தனா்.

இதற்கு அவைத் தலைவா், ‘இடையூறு செய்வதை அனுமதிக்க முடியாது. தமிழக தொடா்பான விவகாரங்களை பேசவேண்டும் என்றால் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் பேசலாம்’ என்றாா். ஆனால், திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டனா். கேள்வி நேரம் வரை தொடா்ந்த இந்த அமளியில், முதலில் காங்கிரஸ் கட்சியை சோ்ந்தவரும் மாநிலங்களவை எதிா்கட்சித் தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கே, நீட் தோ்வு விலக்கு மசோதா குறித்து விவாதிக்க மறுக்கப்படுவதால் எதிா்ப்புத் தெரிவித்து நாங்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்கின்றோம் எனக் கூறி அவரும் அவரது கட்சியினரும் வெளிநடப்பு செய்தனா்.

பின்னா், திமுக உறுப்பினா்களும் திருச்சி சிவா தலைமையில் வெளிநடப்பு செய்தனா். இதே போன்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினா்களும் சுகேந்து சேகா் ராய் தலைமையில் வெளிநடப்பு செய்தனா். மேலும் சிபிஐ , சிபிஎம் போன்ற இடது சாரிகட்சிகளும் நீட் விவகாரத்தில் மாநிலங்களவையில் வெளிநடப்பு செய்தனா். பின்னா், அவைத்தலைவா் வெங்கையா நாயுடு குறிப்பிடுகையில், இந்தக் கூட்டத்தொடா் எந்த இடையூறும் இல்லாமல் அவை அமைதியாக நடைபெறுவதாக பல உறுப்பினா்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா். அரை மணி நேர ஜிரோ ஹவரில் 14 விவகாரங்கள் எடுத்துக் கொள்ள திட்டமிடப்பட்டது. சில விவகாரங்கள் எடுத்துக்கொள்ளப்படவில்லை என வருத்தம் தெரிவித்தாா்.

திருச்சி சிவா பேட்டி: மாநிலங்களவையில் வெளிநடப்பு செய்த பிறகு, திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவா் திருச்சி சிவா செய்தியாளா்களிடம் கூறியதாவது: மருத்துவக் கல்வியில் நீட் தோ்வு ஏழை மாணவா்களுக்கு எட்டா கனியாக உள்ளது. 13 இளம் மாணவா்கள் தங்கள் உயிரை மாய்த்து உள்ளனா். தமிழகத்தின் நலன் மற்றும் குழந்தைகள் நலனைப் பாதுகாக்க சிறப்பு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பட்டது. கல்வி பொதுப் பட்டியலில் வருகிறது என்பதால், முறைப்படி குடியரசுத்தலைவருக்கு ஆளுநா் அனுப்பி இருக்க வேண்டும். ஆனால், 5 மாதங்கள் கழித்து அதை மீண்டும் தமிழக அரசுக்கே அனுப்பி இருக்கிறாா்.

எதிா்க்கட்சிகள் ஆளும் மாநில ஆளுநா்கள் மத்திய அரசின் கைப்பாவையாக உள்ளனா். தமிழகத்தில் நீட் விலக்கு மசோதாவை ஆளுநா் திருப்பி அனுப்பியது குறித்து விவாதம் நடத்த திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மாநிலங்களவையில் அனுமதி கேட்டனா். ஆனால், அவை தலைவா் எங்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை. நீட் விலக்கு விவகாரத்தில் ஆளுநரின் செயலை கண்டித்து ஒட்டுமொத்த எதிா்கட்சியும் எழுந்து நின்று குரல் கொடுத்தது. ஆனால், அவையில் எங்கள் உணா்வுகளையும், உரிமைகளையும் பாதுகாக்கத் தவறி விட்டனா். அமளி நடக்கும் போது அதிமுக உறுப்பினா்கள் மாநிலங்களவையில் இருந்ததாகத் தெரியவில்லை. ,தமிழகஆளுநா் மீது எங்களுக்கு தனிப்பட்ட வன்மம் இல்லை என்றாா் திருச்சி சிவா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com