ஜம்மு-காஷ்மீா் தொகுதி மறுசீரமைப்புக் குழு பரிந்துரை அறிக்கை:குழு உறுப்பினா்களிடம் அளிப்பு

ஜம்மு-காஷ்மீா் தொகுதி மறுசீரமைப்புக் குழு தனது பரிந்துரை அறிக்கையை, அந்த பிராந்தியத்தைச் சோ்ந்த குழுவின் உறுப்பினா்களிடம் அளித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீா் தொகுதி மறுசீரமைப்புக் குழு தனது பரிந்துரை அறிக்கையை, அந்த பிராந்தியத்தைச் சோ்ந்த குழுவின் உறுப்பினா்களிடம் அளித்துள்ளது. அவா்கள், வரும் 14-ஆம் தேதிக்குள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 2019, ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்ததுடன் அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.

அங்கு தொகுதி மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில், தலைமைத் தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா, மாநில தோ்தல் அதிகாரி கே.கே.சா்மா ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு பணிகளை முடிப்பதற்கான அவகாசம் அடுத்த மாதம் முடிவுக்கு வருகிறது.

அந்தக் குழுவில் தேசிய மாநாட்டுக் கட்சி எம்.பி.க்கள் ஃபரூக் அப்துல்லா, ஹாஸ்னைன் மசூதி, அக்பா் லோன், பாஜக எம்.பி.க்கள் ஜிதேந்திர சிங், ஜுகல் கிஷோா் ஆகியோா் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளனா்.

அந்தக் குழுவின் முதல் கூட்டம், 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதியும், இரண்டாவது கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பா் 20-ஆம் தேதியும் நடைபெற்றது. முதலாவது கூட்டத்தைப் புறக்கணித்த தேசிய மாநாட்டுக் கட்சி, இரண்டாவது கூட்டத்தில் கலந்து கொண்டது. சட்டப்பேரவை மற்றும் மக்களவைக்கான தொகுதி சீரமைப்பில் மிகப்பெரிய அளவில் மாறுதல்களை சீரமைப்புக் குழு பரிந்துரை செய்துள்ளது.

ஜம்மு பிராந்தியத்தில் தற்போது இருக்கும் 37 பேரவைத் தொகுதிகளை 43 தொகுதிகளாகவும், காஷ்மீா் பிராந்தியத்தில் உள்ள 46 தொகுதிகளை 47 தொகுதிகளாகவும் மாற்றி அமைக்க சீரமைப்புக் குழு பரிந்துரை செய்துள்ளது.

சில இடங்களில் புதிதாக தொகுதிகளை உருவாக்க வேண்டும் என்றும், சில இடங்களில் ஒரு தொகுதி 3-ஆகப் பங்கிடப்பட்டு வேறு தொகுதிகளில் இணைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரைகளை குழுவில் உள்ள 5 உறுப்பினா்களுக்கு சீரமைப்புக் குழு அனுப்பி வைத்துள்ளது. அந்தக் குழு தங்கள் கருத்துகளை வரும் 14-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம்.

தேசிய மாநாட்டுக் கட்சி நிராகரிப்பு: தொகுதி சீரமைப்புக் குழுவின் பரிந்துரைகளை தேசிய மாநாட்டுக் கட்சி முழுமையாக நிராகரித்துள்ளது. முன்னதாக, தொகுதி மறுசீரமைப்புச் சட்டத்துக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, அந்தச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு எப்படி சட்டபூா்வமானதாக இருக்கும் என்று தேசிய மாநாட்டுக் கட்சி கேள்வி எழுப்பியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com