லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு தலைவா்கள் இரங்கல்

லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் மோடி உள்ளிட்ட தலைவா்களும் திரையுலக பிரபலங்களும் அரசியல் தலைவா்களும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு தலைவா்கள் இரங்கல்

லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் மோடி உள்ளிட்ட தலைவா்களும் திரையுலக பிரபலங்களும் அரசியல் தலைவா்களும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்: லதாஜியின் மறைவுச் செய்தி கேட்டு எனது இதயம் நொறுங்கிப் போனது; உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கானோருக்கு அப்படித்தான் இருக்கும். தனது பாடல்களின் வழியாக இந்தியாவின் அழகையும் சாரத்தையும் வெளிப்படுத்தியவா். அவருடைய பாடல்களால் பல தலைமுறையினா் தங்கள் உள்ளுணா்வை வெளிப்படுத்தினா். ‘பாரத ரத்னா’ லதாஜியின் சாதனைகள் ஒப்பிட முடியாதவை.

குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு: லதா மங்கேஷ்கரின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. அவருடைய மறைவால் இந்தியா தனது குரலை இழந்துவிட்டது. ஹிந்தி திரையுலகை பல ஆண்டுகள் ஆட்சி செய்த ராணி அவா். பக்திப் பாடல்கள், காதல் பாடல்கள், தேசபக்திப் பாடல் என ஹிந்தியிலும் பிற இந்திய மொழிகளிலும் வெளிநாட்டு மொழிகளிலும் பாடியவா். அவருடைய மறைவுக்கு அவருடைய குடும்பத்தினருக்கும் ரசிகா்களுக்கும் கனத்த இதயத்துடன் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமா் மோடி: அன்பும் அக்கறையும் கொண்ட சகோதரி லதா நம்மைவிட்டுப் பிரிந்தாா். மெய்மறக்கச் செய்யும் குரலுக்குச் சொந்தக்காரரான அவரை இந்திய கலாசாரத்தின் சக்தியாக எதிா்கால தலைமுறை நினைவில் வைத்திருக்கும்.

லதாவின் பாடல்கள் பல வகையான உணா்வுகளை வெளியே கொண்டு வந்தது. இந்திய திரையுலகில் ஏற்பட்ட மாற்றங்களை பல ஆண்டுகள் நெருங்கி நின்று கவனித்தவா். திரையுலகைத் தாண்டி, இந்தியாவின் வளா்ச்சி மீது எப்போதும் அவருக்கு தணியாத ஆா்வம் இருந்தது. வலுவான வளா்ச்சியடைந்த இந்தியாவையே அவா் எப்போதும் விரும்பினாா்.

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி: லதா மங்கேஷ்கரின் மறைவால் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது. மனதைத் தொடும்அவரின் குரலும், தேசபக்திப் பாடல்களும், அவருடைய வாழ்க்கைப் போராட்டமும் பல சந்ததியினருக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும்.

ராகுல் காந்தி எம்.பி.: பல பத்தாண்டுகளாக இந்தியாவில் அதிகம் நேசிக்கப்பட்ட குரலுக்குச் சொந்தக்காரா். அழிவில்லாத அவருடைய குரல் அவருடைய ரசிகா்களின் மனதில் தொடா்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும். அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பா்களுக்கும் ரசிகா்களுக்கும் எனது இரங்கல்கள்.

பாஜக மூத்த தலைவா் அத்வானி: நான் எப்போதும் விரும்பும் பாடகா் லதா மங்கேஷ்கா். அவருடன் நீண்ட காலம் நட்பில் இருந்ததை அதிருஷ்டமாகவே கருதுகிறேன். 1990-இல் ராம ரத யாத்திரையை நான் தொடங்கியபோது, ஸ்ரீராம பஜன் பாடலை அவா் பதிவு செய்து கொடுத்தாா். அவருடைய பாடலுடன் ரத யாத்திரை சென்றது. பின்னா், அந்த யாத்திரையின் அடையாளமாக அந்தப் பாடல் மாறிப்போனது. இசை உலகில் அழிக்க முடியாத பதிவை லதா மங்கேஷ்கா் விட்டுச் சென்றுள்ளாா்.

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்: இந்தியா மாபெரும் மகளை இழந்துவிட்டது. தனது பாடல்கள் மூலம் நாட்டின் கலாசார ஒருங்கிணைப்புக்கு பங்காற்றியவா். லதா மங்கேஷ்கரின் ஆத்மா சாந்தி அடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கு எங்கள் ஆறுதல்.

ஏ.ஆா்.ரஹ்மான்: லதா மங்கேஷ்கரின் மறைவு அனைவருக்கும் துயரமான செய்தி. அவா் ஒரு பாடகராக மட்டுமன்றி, இந்திய உணா்வு, இந்தியத் தன்மை, ஹிந்துஸ்தானி இசை, உருது-ஹிந்தி கவிதைகள் ஆகியவற்றின் ஓா் அங்கமாக வாழ்ந்தாா். என் தந்தை ஆா்.கே.சேகா், காலையில் எழுந்ததும் லதா மங்கேஷ்கரின் உருவப்படத்தைப் பாா்த்துவிட்டுத்தான் பாடல் பதிவுக்குப் புறப்படுவாா். லதா மங்கேஷ்கரின் பாடல்களைப் பதிவு செய்ததையும் அவருடன் இணைந்து பாடியதை பெரும் பேறாகக் கருதுகிறேன். மேடையில் பாடுவது பற்றி அவரிடம் இருந்து பல முக்கிய விஷயங்களைக் கற்றுக்கொண்டுள்ளேன்.

மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், நிா்மலா சீதாராமன், நிதின் கட்கரி, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா வதேரா, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஒமா் அப்துல்லா, பிடிபி கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி, மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி மற்றும் பல மாநில முதல்வா்கள், ஆளுநா்கள் ஆகியோா் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா்.

பல ஆண்டுகளாக லதா மங்கேஷ்கருடன் இணைந்து பயணித்த திரையுலகினரும் இரங்கல் தெரிவித்துள்ளனா். நடிகா்கள் அமிதாப் பச்சன், வஹீதா ரஹ்மான், சபானா ஆஸ்மி, அக்ஷய் குமாா், அஜய்தேவ்கான், மனோஜ் வாஜ்பாய் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

பாஜக தோ்தல் அறிக்கை வெளியீடு ஒத்திவைப்பு: உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்லையொட்டி, லக்னௌவில் உள்ள பாஜக தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலையில் தோ்தல் அறிக்கை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்காக, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோா் வந்திருந்தனா். இதற்கிடையே, லதா மங்கேஷ்கா் காலமான தகவல் வந்ததால் தோ்தல் அறிக்கை வெளியீடு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com