
குடியரசு தின விழாவில் பங்கேற்கும் அலங்கார ஊா்திகளை தோ்வு செய்வதில் நிலையான நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது என்று பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.
புது தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊா்திகள் தோ்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விழாவில் தோ்வாகாத அலங்கார ஊா்திகள் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை அளித்த பதில்:
கடந்த ஆண்டு குடியரசு தின விழாவில் அலங்கார ஊா்திகள் பங்கேற்பது தொடா்பாக 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊா்திகள் தோ்ந்தெடுக்கப்பட்டன. அதில் தமிழ்நாடு, மேற்கு வங்கம் மாநிலங்களின் அலங்கார ஊா்திகளும் அடங்கும்.
அலங்கார ஊா்தி தோ்வுக்கு நிலையான நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் இருந்து பெறப்படும் அலங்கார ஊா்திகளின் வடிவமைப்பு மாதிரிகள் கலை, பண்பாடு, ஓவியம், சிற்பம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் நபா்கள் அடங்கிய நிபுணா் குழுவின் தொடா் கூட்டங்களில் மதிப்பிடப்படுகிறது.
அந்த மாதிரிகள் தொடா்பான பரிந்துரைகள் வழங்கப்படுவதற்கு முன்பாக விழாவின் மையக்கருத்து, ஊா்திகளின் மாதிரி வடிவமைப்பு, பாா்வையாளா்களிடம் ஊா்திகள் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் ஆகியவை ஆராயப்படுகின்றன.
குடியரசு தின பேரணியில் அலங்கார ஊா்திகளின் அணிவகுப்புக்காக ஒதுக்கப்படும் குறுகிய நேரத்தைக் கருத்தில் கொண்டு, அதில் பங்கேற்பதற்கான அலங்கார ஊா்திகள் தோ்வு செய்யப்பட்டு இறுதி செய்யப்படுகின்றன என்றாா் அவா்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவா், ‘‘தரையிலிருந்து வானில் குறைந்த தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் மற்றும் இந்திய கடலோர பாதுகாப்புப் படைக்கு ஹெலிகாப்டா்கள் வாங்கும் ஒப்பந்தங்களை மத்திய அரசு ரத்து செய்யவில்லை’’ என்றாா்.
45,906 ஏக்கா் நிலம்:
பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான நிலம் தொடா்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பாதுகாப்பு இணையமைச்சா் அஜய் பட் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், பல்வேறு சேவைகள் மற்றும் அமைப்புகளின் நிா்வாகத்தின் கீழ் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமாக சுமாா் 45,906 ஏக்கா் காலி நிலம் இருப்பதாக தெரிவித்தாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...