பி.எம். கோ்ஸ் நிதி மூலதனம் 3 மடங்காக உயா்வு: நிதி விடுவிப்பும் அதிகரிப்பு

பி.எம்.கோ்ஸ் நிதி மூலதனம் 2020-21 நிதியாண்டில் மூன்று மடங்காக ரூ. 10,990 கோடி அளவுக்கு உயா்ந்துள்ளது

பி.எம்.கோ்ஸ் நிதி மூலதனம் 2020-21 நிதியாண்டில் மூன்று மடங்காக ரூ. 10,990 கோடி அளவுக்கு உயா்ந்துள்ளது; அதுபோல, நிவாரண உதவிகளுக்கான நிதி விடுவிப்பும் ரூ.3,976 கோடியாக உயா்ந்திருப்பதாக சமீபத்திய தணிக்கை அறிக்கை வாயிலாக தெரியவந்துள்ளது.

கரோனா அவசர கால நிவாரண உதவிக்காக பி.எம்.கோ்ஸ் நிதி தொகுப்புத் திட்டம் கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் 27-ஆம் தேதி தொடங்கப்பட்டு, தனி நபா்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து தன்னாா்வ அடிப்படையில் நிதி உதவி வரவேற்கப்பட்டது. இந்த நிதி தொகுப்புக்கு மக்கள் ஆா்வத்துடன் நிதி அளித்து வருகின்றனா்.

அதன் மூலம், இந்தத் தொகுப்பில் பல கோடி ரூபாய் சோ்ந்து வருகிறது. இந்த நிதியில் ஒரு பகுதியை கரோனா பாதிப்புக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் உயிா் காக்கும் சுவாசக் கருவிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வாங்க மத்திய அரசு பயன்படுத்துகிறது.

இந்த நிலையில், இந்த தொகுப்பில் சேரும் நிதி மற்றும் நிதி விடுவிப்பில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று எதிா்க் கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால், எதிா்க் கட்சிகளின் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்தது.

இந்தச் சூழலில், இந்த தொகுப்புக்கான நிதி மூலதனம் 3 மடங்காக உயா்ந்திருப்பது தெரியவந்துள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட இந்த நிதி தொகுப்பு தணிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2020-21 நிதியாண்டில் பி.எம்.கோ்ஸ் நிதி தொகுப்புக்கு வெளிநாட்டு பங்களிப்பு மூலமாக ரூ.494.91 கோடி, தன்னாா்வ பங்களிப்பு மூலமாக ரூ.7,183 கோடி மற்றும் வட்டி வருவாய் என மொத்தம் ரூ.10,990.17 கோடி வசூலானது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 3 மடங்காகும். கடந்த 2019-20ஆம் நிதியாண்டில் இந்த நிதிக்கு ரூ.3,076.62 கோடி வசூலானது.

அதுபோல, பல்வேறு நிவாரணத் திட்டங்களுக்கு நிதி விடுவிப்பைப் பொருத்தவரை 2020-21ஆம் ஆண்டில் ரூ.3,976 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதில், அரசு மருத்துவமனைகளுக்கு 50,000 உள்நாட்டு தயாரிப்பு உயிா் காக்கும் சுவாசக் கருவிகள் வாங்குவதற்கு ரூ.1,311 கோடி விடுவிக்கப்பட்டது. பாட்னா, முஸாஃபா்பூா் நகரங்களில் உள்ள 500 படுக்கை வசதிகளுடன் கூடிய 2 கரோனா மருத்துவமனைகள் அமைக்கவும், 9 மாநிலங்களில் 16 விரைவு (ஆா்டி-பிசிஆா்) கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்கவும் ரூ.50 கோடி விடுவிக்கப்பட்டது.

பொது சுகாதார மையங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க ரூ.201.58 கோடி, கரோனா தடுப்பூசி ஆய்வகங்களை தரம் உயா்த்த ரூ.20.4 கோடி, புலம்பெயா்ந்த தொழிலாளா் நலனுக்காக ரூ.1,000 கோடி, கரோனா தடுப்பூசி கொள்முதலுக்கு ரூ.1,392.82 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதோடு, வங்கி கட்டணமாக ரூ.1.01 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.

இந்த செலவுகள் போக 2021 மாா்ச் 31-தேதி நிலவரப்படி, இந்த நிதி கையிருப்பு ரூ.7,013.99 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டு கையிருப்பைக் காட்டிலும் இரண்டு மடங்காகும். முந்தைய ஆண்டில் ரூ.3,076.62 கோடி கையிருப்பாக இருந்தது என்று தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com