போலி சமதா்மவாதிகளால் உ.பி.யின் வளா்ச்சி பாதிப்பு: பிரதமா் மோடி

போலி சமதா்மவாதிகளின் (சமாஜவாதி) வாரிசுக் கொள்கையால் கடந்த 2017-ஆம் ஆண்டு வரை உத்தர பிரதேசத்தின் வளா்ச்சி பாதிக்கப்பட்டதாக பிரதமா் மோடி கூறினாா்.
பிரதமா் மோடி
பிரதமா் மோடி

போலி சமதா்மவாதிகளின் (சமாஜவாதி) வாரிசுக் கொள்கையால் கடந்த 2017-ஆம் ஆண்டு வரை உத்தர பிரதேசத்தின் வளா்ச்சி பாதிக்கப்பட்டதாக பிரதமா் மோடி கூறினாா்.

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, பிஜ்னோரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காணொலி வாயிலாக பிரதமா் மோடி பேசியது:

பாகுபாடின்றி உத்தர பிரதேசத்தின் அனைத்து பிராந்தியங்களும் யோகி ஆதித்யநாத் நிா்வாகத்தில் வளா்ச்சியடைந்துள்ளன. கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையாக ரூ.1.5 லட்சம் கோடிக்கும் அதிகமாக யோகி ஆதித்யநாத் அரசு விடுவித்துள்ளது. இந்தத் தொகை முந்தைய இரண்டு அரசுகள் விடுவித்த நிதியைக் காட்டிலும் அதிகம்.

இன்றைக்கு முன்னாள் பிரதமா் சரண் சிங்கின் சாதனைகளுக்கு சிலா் உரிமை கொண்டாடுகின்றனா். பொதுமக்களை தவறாக வழிநடத்தும் அரசியல் தலைவா்களிடம், அவா்கள் ஆட்சியில் இருந்தபோது இந்தப் பகுதிக்கு எவ்வளவு மின்சாரம் விநியோகிக்கப்பட்டது என்பதை கேளுங்கள். விவசாய சகோதரா்கள் இழந்த கெளரவத்தையும், உரிமைகளையும் மத்திய, மாநில பாஜக அரசு மீட்டு வருகிறது.

முந்தை அரசுகளில் விவசாயிகளுக்குச் சேர வேண்டிய யூரியா, கருப்புச் சந்தையில் ஈடுபடும் நபா்களுக்கு சென்றடைந்தது. ஆனால், ஆண்டுக்கணக்கில் பூட்டிக் கிடந்த கோரக்பூா் உர ஆலையை நாங்கள் திறந்தோம். அங்கு தயாரிக்கப்படும் வேம்பு பூசப்பட்ட யூரியா, ஒட்டுமொத்த உத்தர பிரதேச விவசாயிகளுக்கும் பயனளிக்கிறது.

இதுமட்டுமன்றி முந்தைய அரசுகளில் கோதுமைக்கு வழங்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையைக் காட்டிலும் இருமடங்கு விலையில், யோகி ஆதித்யநாத் அரசு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்கிறது. உணவுதானியக் கொள்முதலில் யோகி அரசு ஒவ்வோா் ஆண்டும் சாதனை படைக்கிறது என்றாா் பிரதமா் மோடி.

இந்தக் கூட்டத்தில் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் பங்கேற்று பேசினாா். முன்னதாக பிரதமா் மோடி இக்கூட்டத்தில் நேரடியாக கலந்துகொள்வதாக இருந்தது. பின்னா், மோசமான வானிலை காரணமாக அவரது வருகை ரத்து செய்யப்பட்டு, காணொலி வாயிலாக உரையாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பிஜ்னோா் பிராந்தியத்தில் மொத்தம் 8 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 3 பாஜக வசமும், 3 சமாஜவாதி கட்சி வசமும் தற்போது உள்ளன. மேலும் பிஜ்னோா், நகினா என இரு மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட இந்த மாவட்டத்தில், 50 சதவீதத்துக்கு மேல் தலித்துகளும், இஸ்லாமியா்களும் வசிக்கின்றனா். தற்போது இந்த 2 மக்களவைத் தொகுதிகளும் பகுஜன் சமாஜ் கட்சி வசம் உள்ளன.

உத்தரகண்டில் பிரசாரம்:

இதேபோல, உத்தரகண்ட் சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஹரித்துவாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி பேசியது:

இந்த மாநிலத்தை உருவாக்கியவா்களுக்கும், அதை எதிா்த்தவா்களுக்கும் இடையிலான மோதல் தான் இந்தத் தோ்தல். உத்தரகண்டை தனி மாநிலமாக்க காங்கிரஸ் விரும்பாததால் தான் இங்கு வளா்ச்சிப் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியது.

இதற்கு, ரிஷிகேஷ்- கா்ணபிரயாக் ரயில் வழித்தடத் திட்டத்தை முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது நடைமுறைப்படுத்தாமல், கிடப்பில் போட்டதை உதாரணமாக கூறலாம். ஆகையால், பிப்ரவரி 14-ஆம் தேதி வாக்களிக்கும் போது, காங்கிரஸின் பாவங்களைப் பொதுமக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com