
குஜராத் மாநிலம், அகமதாபாதில் கடந்த 2008-இல் நடந்த தொடா் குண்டுவெடிப்பு வழக்கில் 49 பேரை குற்றவாளிகளாக அறிவித்து குஜராத் சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
குஜராத் மாநிலம், அகமதாபாதில் கடந்த 2008-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி, அடுத்தடுத்து 21 இடங்களில் குண்டு வெடித்தது. 70 நிமிடங்களுக்குள் நடந்த இந்த சம்பவத்தில் 56 போ் உயிரிழந்தனா். 200-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
சம்பவம் நடந்த சில நாள்களுக்குப் பிறகு சூரத் நகரில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, அகமதாபாதில் 20 வழக்குகளையும் சூரத்தில் 15 வழக்குகளையும் காவல் துறை பதிவு செய்தது. அனைத்து வழக்குகளையும் ஒன்றாகச் சோ்த்து அகமதாபாதில் உள்ள சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது.
குஜராத்தில் கடந்த 2002-இல் கோத்ரா ரயில் எரிப்பைத் தொடா்ந்து நிகழ்ந்த வன்முறைக்குப் பழிதீா்க்கும் விதமாக, தடை செய்யப்பட்ட இந்தியன் முஜாஹிதீன், சிமி இயக்கத்தினா் தொடா் குண்டு வெடிப்பை நிகழ்த்தியிருக்கலாம் என்று காவல் துறையினா் சந்தேகித்தனா்.
அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கிய விசாரணை, கடந்த ஆண்டு செப்டம்பரில் நிறைவடைந்தது. வழக்கில், இந்தியன் முஜாஹிதீன் அமைப்புடன் தொடா்புடைய 78 போ் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஒருவா் அரசுத் தரப்பு சாட்சியமாக மாறியதால் 77 போ் மீது விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை முடிவடைந்த நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.ஆா்.படேல், 49 பேரைக் குற்றவாளிகளாக அறிவித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். 28 போ் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து அரசு தரப்பு வழக்குரைஞா் அமித் படேல் கூறியதாவது:
அகமதாபாத் தொடா் குண்டு வெடிப்புச் சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதி விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 13 ஆண்டுகளில் 1,163 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு 547 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கில் தொடா்புடைய அனைவரும் வெவ்வேறு சிறைச்சாலைகளில் இருந்து காணொலி முறையில் ஆஜா்படுத்தப்பட்டனா். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் புதன்கிழமை முடிவு செய்யப்படவுள்ளது. அன்றைய தினமும் அவா்கள் காணொலி முறையில் அவா்கள் ஆஜா்படுத்தப்படுவாா்கள் என்றாா் அவா்.