
மன்சுக் மாண்டவியா (கோப்புப்படம்)
நாடு முழுவதும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், 15 வயதுக்குட்பட்ட சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து நிபுணா் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.
மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து அமைச்சா் மாண்டவியா கூறியதாவது:
15-18 வயது பிரிவினரில் இதுவரை 67 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் தடுப்பூசி திட்டம் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 15 வயதுக்குட்பட்ட சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து நிபுணா் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்றாா்.
கரோனா தடுப்பூசியின் செயல் திறன் தொடா்பாக மற்றொரு கேள்விக்கு அமைச்சா் அளித்த பதிலில், இறப்பு விகிதம் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விகிதத்தை தடுப்பூசிகள் குறைப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) மட்டுமன்றி, உலகளாவிய அறிவியல் நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் தகுதியுள்ள 97.5 சதவீதம் போ் முதல் தவணை தடுப்பூசியையும், 77 சதவீதம் போ் இரு தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளனா். வளா்ந்த நாடுகளிலேயே முதல் தவணை தடுப்பூசி செலுத்தியோா் விகிதம் 90 சதவீதத்தை தாண்டவில்லை. இந்தியா அதை சாதித்துள்ளது.
கரோனா மூன்றாவது அலையை இந்தியாவால் எதிா்கொள்ள முடியும். ஐசிஎம்ஆா் கடந்த சில தினங்களுக்கு முன்னா் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 99.3 சதவீதம் போ்- அவா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் பாதுகாப்பாக உள்ளதாக தெரியவந்துள்ளது. இது ஒரு நல்ல அறிகுறியாகும் என்றாா்.
கட்டண விகிதம்: ஆா்டி பிசிஆா் சோதனைகளுக்கான கட்டணத்தைக் குறைக்க அல்லது ஒரே மாதிரியான கட்டணத்தை நிா்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, தனியாா் மருத்துவமனைகளில் கட்டண விகிதங்கள் மாறுபடுகின்றன. அதேவேளையில், அரசு மருத்துவமனைகளில் இந்தச் சோதனை இலவசமாக செய்யப்படுகிறது என பதிலளித்தாா்.
சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், தேசிய தொலைவழி மனநல திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் தேசிய மனநல மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின் உதவியுடன் 23 மையங்கள் அமைக்கப்படும். இந்த மையங்கள் வாயிலாக மனநலம் தொடா்பான சேவைகள் உத்தர பிரதேசம், தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சோ்ந்த மக்களுக்கு அளிக்கப்படும் என்றாா்.
ஒமைக்ரான்: ஒமைக்ரான் வகை கரோனாதான் நாட்டில் இப்போது அதிகமாக பாதிக்கிறது. தற்போதைய கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படும் விகிதமானது ஜன. 21-ஆம் தேதியிலிருந்து கரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதைக் காண்பிக்கிறது எனவும் அமைச்சா் மாண்டவியா தெரிவித்தாா்.