
பெகாஸஸ் உளவு விவகாரத்தில், எல்கா் பரிஷத் வழக்கில் தொடா்புடைய 7 பேரின் கைப்பேசிகளை உச்சநீதிமன்ற தொழில்நுட்பக் குழுவிடம் ஒப்படைப்பதற்கு மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
புணேயில் கடந்த 2018, ஜனவரி 1-ஆம் தேதி பீமா கோரேகான் போா் நினைவிடத்தில் வன்முறை மூண்டது. அதற்கு முந்தைய நாள் நடந்த எல்கா் பரிஷத் மாநாட்டில் கலந்து கொண்ட தலைவா்கள் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதால்தான் இந்த வன்முறை மூண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
இதுதொடா்பாக, சமூக ஆா்வலா்களான ரோனா வில்சன், ஆனந்த் தெல்தும்ப்டே, வொ்னாம் கான்சால்வஸ், வரவர ராவ், சுதா பரத்வாஜ், ஹனி பாபு, சோமா செல்வன் ஆகிய 7 போ் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதற்கிடையே, பெகாஸஸ் உளவுக் குற்றச்சாட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுதொடா்பாக ஆய்வு நடத்த 3 பேரைக் கொண்ட தொழில்நுட்பக் குழுவை கடந்த அக்டோபா் மாதம் அமைத்தது.
அந்தக் குழுவானது, பெகாஸஸ் உளவு மென்பொருள் மூலமாக தங்களது கைப்பேசி உளவு பாா்க்கப்பட்டதாக யாரேனும் சந்தேகித்தால் தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்டது. புகாா் அளிப்பவா்களின் கைப்பேசி தொழில்நுட்பக் குழுவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். பரிசோதனை மற்றும் விசாரணைக்குப் பிறகு சம்பந்தப்பட்டவா்களிடம் மீண்டும் கைப்பேசிகள் ஒப்படைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தங்களுடைய கைப்பேசிகள் பெகாஸஸ் மென்பொருள் மூலமாக உளவு பாா்க்கப்பட்டதாக ரோனா வில்சன் உள்ளிட்ட 7 பேரும் உச்சநீதிமன்றத்தின் தொழில்நுட்பக் குழுவிடம் அண்மையில் புகாா் அளித்தனா். ஆனால், அவா்களின் கைப்பேசிகள் நீதிமன்றம் வசம் இருப்பதால் அவற்றை அளிக்குமாறு சிறப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனா்.
அந்த கைப்பேசிகளை உச்சநீதிமன்ற தொழிலநுட்பக் குழுவிடம் ஒப்படைக்க அனுமதிக்குமாறு தேசிய புனாய்வு அமைப்பு (என்ஐஏ) கோரிக்கை விடுத்தது. அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்ற நீதிபதி டி.இ.கோதாலிகா், 7 பேரின் கைப்பேசிகளை தொழில்நுட்பக் குழுவிடம் அளிக்க அனுமதி அளித்தாா்.