Enable Javscript for better performance
கர்நாடகத்தில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக போராட்டம்: மாணவர்கள் மோதல்; போலீஸார் தடியடி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கர்நாடகத்தில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக போராட்டம்: மாணவர்கள் மோதல்; போலீஸார் தடியடி

    By DIN  |   Published On : 09th February 2022 03:35 AM  |   Last Updated : 09th February 2022 03:35 AM  |  அ+அ அ-  |  

    Students_Hijab_Controversy_PTI

    கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்திய இஸ்லாமிய மாணவிகளுக்கும், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காவித் துண்டு அணிந்து முழக்கங்களை எழுப்பிய மாணவர்களுக்கும் இடையே பல இடங்களில் மோதல் உருவானது. மோதலைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி, கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
     கர்நாடகத்தில் கடந்த ஒரு மாதமாக ஹிஜாப் தொடர்பான சர்ச்சை கல்லூரி மாணவர்களிடையே காணப்படுகிறது. உடுப்பி மாவட்டம், குந்தாபுராவில் உள்ள அரசு பியூ கல்லூரியில் ஹிஜாப் அணிய பள்ளி நிர்வாகம் தடை விதித்தது. ஆனாலும், முஸ்லிம் மாணவிகள் 6 பேர் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்தனர். ஆனால், அவர்கள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை. மாணவிகளுக்கு ஆதரவாக மேலும் பல முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்தனர். அவர்கள் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
     இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவிகள் போராட்டம் நடத்தினர். அதற்கு பதிலடியாக ஹிந்து மாணவ, மாணவிகள் காவித் துண்டை கழுத்தில் அணிந்து கொண்டு கல்லூரிக்கு வந்தனர். இது பெரும் பிரச்னையாக உருவெடுத்தது. நாடுமுழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளிவைக்க விரும்பிய கர்நாடக அரசு, "பள்ளி- கல்லூரி வளாகங்களில் மாணவ, மாணவிகள் சீருடையில் மட்டுமே வர வேண்டும்' என்று பிப். 5-ஆம் தேதி உத்தரவிட்டது.
     ஆனாலும், ஹிஜாப் அணியும் உரிமை கோரி முஸ்லிம் மாணவிகள் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர். அதற்கு பதிலடியாக ஹிந்து மாணவ, மாணவிகள் காவித் துண்டு அணிந்து கொண்டு கல்லூரிக்கு வந்தனர். அதேசமயம், முஸ்லிம் மாணவிகளுக்கு ஆதரவாக தலித் மாணவர்கள் நீலநிறத் துண்டு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     ஹிஜாபுக்கு எதிராக பாஜக தலைவர்களும், ஆதரவாக காங்கிரஸ், மஜத தலைவர்களும் குரல் கொடுக்க தொடங்கியதும் இப் பிரச்னை அரசியல் மோதலாக மாறியது.
     இதனிடையே, ஹிஜாப் அணிய அனுமதி கோரி குந்தபுரா அரசு பியூ கல்லூரி மாணவிகள், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இதுதொடர்பான விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அடுத்த விசாரணை புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
     இந்தநிலையில், உடுப்பியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு கல்லூரியில் செவ்வாய்க்கிழமை ஹிஜாப் அணிவதற்கு அனுமதி கோரி முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காவித் துண்டு, காவி தலைப்பாகை அணிந்து வந்த ஹிந்து மாணவ, மாணவிகள் ஹிஜாபுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதற்கு எதிராக முஸ்லிம் மாணவிகளும் முழக்கங்களை எழுப்பினர்.
     அப்போது, இரு தரப்பினரிடையே மோதல் உருவானது. கல்லூரி நிர்வாகம், போலீஸார் தலையிட்டு அனைவரையும் கலைத்தனர். அதைத் தொடர்ந்து, உடுப்பி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
     ஹிஜாப்- காவித் துண்டு மோதல் சிவமொக்கா, பாகல்கோட், தாவணகெரே, கதக், மண்டியா, ஹாசன்,விஜயபுரா மாவட்டங்களுக்கும் பரவியது. பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய காவித் துண்டு அணிந்த மாணவர்கள் முயன்றனர். இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை எழுந்தது. மாணவர்களை போலீஸார் தடியடி நடத்தி விரட்டினர்.
     சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் நுழைந்த காவித் துண்டு அணிந்த மாணவர்கள், அங்குள்ள தேசியக் கொடி ஏற்றும் கம்பத்தில் காவிக் கொடியை ஏற்றி, ஹிஜாபுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அதேபோல, தாவணகெரே மாவட்டம், ஹரிஹராவிலும் நிலைமை மோசமடையவே மாணவர்களை போலீஸார் தடியடி நடத்திவிரட்டினர்.
     மேலும் ஹாசன், சிவமொக்கா, தாவணகெரே மாவட்டங்களில் கலவரத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஒருசில கல்லூரிகளில் நடந்த கல்வீச்சு சம்பவத்தில் 20 இரு சக்கர வாகனங்கள், 10 கார்கள் சேதமடைந்தன. மேலும் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர சிவமொக்கா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பள்ளிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை: முதல்வர் அறிவிப்பு
     புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் முதல்வர் பசவராஜ் பொம்மை பேசியதாவது:
     ஹிஜாப் தொடர்பான வழக்கு விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. எனவே, மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி- கல்லூரி நிர்வாகங்கள், பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும். உயர்நீதிமன்ற ஆணையை எதிர்பார்ப்பதால், மாநிலத்தில் அமைதியைக் காக்க அடுத்த 3 நாள்களுக்கு (பிப். 9 முதல் 11) அனைத்து (அரசு மற்றும் தனியார்) உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்படுகிறது என்றார்.
     கர்நாடகத்தில் உள்ள 8, 9, 10-ஆம் வகுப்புகள், முதல் மற்றும் இரண்டாமாண்டு பியூசி கல்லூரிகள், பட்டயக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், முதனிலை கல்லூரிகள் உள்ளிட்ட தொழில்நுட்பக் கல்லூரிகள் அனைத்துக்கும் பிப். 9-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதிவரை விடுமுறை அளித்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
     இதனிடையே, கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறியதாவது:
     அனைவரும் அமைதி காக்க வேண்டும்; சட்டத்தை யாரும் கையில் எடுக்கக் கூடாது. போலீஸார் நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பை யாரும் உருவாக்கக் கூடாது. மாணவர்கள் அனைவரும் படித்தவர்கள். எதிர்காலத்தைப் பற்றி மாணவர்கள் சிந்திக்க வேண்டும். 2 ஆண்டுகால கரோனா காலத்துக்கு பிறகு நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளன.
     அடுத்த சில மாதங்களில் நடக்கவிருக்கும் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும். இந்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் மதவாத அமைப்புகளை ஒடுக்க வேண்டும். மதச் சடங்குகளில் ஈடுபடுவதற்கான அல்லது மதங்களை வெளிப்படுத்தும் உடைகளை வெளிப்படுத்துவதற்கான இடம் கல்வி நிறுவனங்கள் அல்ல. அனைவரும் அமைதி காக்க வேண்டும். குழந்தைகளுக்கு நல்வழி காட்டுமாறு பெற்றோர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

    கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்றும் விசாரணை
    ஹிஜாப் சர்ச்சை தொடர்பான வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு (பிப்.9) ஒத்திவைத்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
     உடுப்பி மாவட்டம், குந்தாபுராவைச் சேர்ந்த பியூ கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள், கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் அணிவதற்கு அனுமதி கோரி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
     மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞர் தேவதத் காமத் ஆஜராகி வாதிட்டதாவது: புனித குரானில் குறிப்பிட்டுள்ளபடி, முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது அவசியமாகும்; ஹிஜாப் என்பது உடை மட்டுமே. புட்டசாமி வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, உடை அணிவது தனிநபர் உரிமையாகும். பள்ளி, கல்லூரி வளாகங்களில் சீருடையைக் கட்டாயமாக்கி பிப். 5-ஆம் தேதி கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு முரண்பாடானது. சீருடை அணியுமாறு கட்டாயப்படுத்துவது மத வழக்கங்களைப் பாதுகாக்கும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 25-இக்கு எதிரானது. மேலும், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 19(1)(ஏ) அளித்திருக்கும் உரிமைக்கும் எதிரானது.
     கடந்த 2 ஆண்டுகளாக மாணவிகள் ஹிஜாப் அணிந்து கொண்டு அமைதியான முறையில் மத வழக்கங்களைக் கடைப்பிடித்து வந்துள்ளனர். ஹிஜாப் அணியும் மாணவிகளுக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அடுத்த 2 மாதங்களில் தேர்வு நடக்கவிருக்கிறது. கல்லூரி பரிந்துரைத்திருக்கும் சீருடையில் துப்பட்டா இடம் பெறுவதால், அதை ஹிஜாப்பாக பயன்படுத்த மாணவிகளை அனுமதிக்க வேண்டும் என்றார்.
     முன்னதாக அரசின் தலைமை வழக்குரைஞர் பிரபுலிங் நவடகி, "பெரும்பாலான கல்வி நிறுவனங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் போராட்டம் நடந்து வருகிறது. எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அந்தப் பின்னணியில் இந்த வழக்கு முக்கியமானதாகும். நிலைமையை மாநில அரசு கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. இந்த வழக்கை முழுமையாக விசாரித்து தீர்ப்பு கூறும் வரை, இடைக்காலமாக சில உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்க கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.
     இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித்," பொதுமக்களின் நற்குணங்களில் நீதிமன்றம் முழு நம்பிக்கை வைத்திருக்கிறது. அதை மக்கள் செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். மாணவர் சமுதாயம் உள்ளிட்ட பொதுமக்கள் அமைதி காக்க முன்வர வேண்டும்' என்றார். இந்த வழக்கின் அடுத்த விசாரணையை புதன்கிழமைக்கு (பிப்.9) ஒத்திவைத்தார்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp