விவசாயியின் வங்கிக் கணக்கில் தவறுதலாக ரூ.15 லட்சம்; வீடு கட்டிய பிறகு தேடி வந்த அதிகாரிகள்

மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த விவசாயி ஞானேஷ்வர் ஓடேவுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணமழை கொட்டும் நாளாகவே இருந்தது.
விவசாயியின் வங்கிக் கணக்கில் தவறுதலாக ரூ.15 லட்சம்
விவசாயியின் வங்கிக் கணக்கில் தவறுதலாக ரூ.15 லட்சம்


பணமழை கொட்டும் என்பார்கள்.. அன்றுதான் பாக்கெட் காத்தாடும்.. இது நகைச்சுவையாக நாம் சொல்வது.. ஆனால், மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த விவசாயி ஞானேஷ்வர் ஓடேவுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணமழை கொட்டும் நாளாகவே இருந்தது.

அவரது ஜன் தன் வங்கிக் கணக்கில் ஒரு லட்சமல்ல, இரண்டு லட்சமல்ல சுமார் 15 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. அதைப் பார்த்ததும் அவருக்கு தலை,கால் புரியவில்லை. பிரதமர் நரேந்திர மோடி, தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாகவே ஞானேஷ்வர் கருதினார். அது மட்டுமா? பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதமும் எழுதினார்.

மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத் மாவட்டம் பைதான் தாலுகாவைச் சேர்ந்தவர் ஞானேஷ்வர். வங்கிக் கணக்கிலிருந்து ரூ.9 லட்சத்தை எடுத்து, தனக்கு சொந்தமான இடத்தில் புதிய வீடு ஒன்றை கட்டிக் கொண்டார்.

நிம்மதியாக வாழ்ந்து வந்த ஞானேஷ்வருக்கு ஆறு மாதங்கள் சொர்க்கபூமியாக இருந்தது. சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, வங்கி அதிகாரிகள் ஞானேஷ்வரைத் தேடிவந்த போதுதான் நடந்த விபரீதம் என்னவென்று தெரிந்தது. அதாவது, தொழில்நுட்பக் கோளாறால், விவசாயி ஞானேஷ்வரின் ஜன் தன் வங்கிக் கணக்கில், ரூ.15 லட்சம் வரவு வைக்கப்பட்டுவிட்டதாகக் கூறியதோடு, முழுத் தொகையையும் திருப்பியளிக்குமாறு வலியுறுத்தினர்.

பிம்பல்வாடி கிராம பஞ்சாயத்தில் ஒரு சில நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ள ஒதுக்க வேண்டிய தொகை, தவறுதலாக ஞானேஷ்வரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. பிறகு பல்வேறு கட்ட தணிக்கையின்போதுதான், வங்கி அதிகாரிகள் தாங்கள் செய்த மிகப்பெரிய தவறை ஆறு மாதங்களுக்குப் பிறகு கண்டுபிடித்து ஞானேஷ்வரை தேடி வந்துள்ளனர்.

அதுவரை பிரதமர் மோடிதான் தனக்கு ரூ.15 லட்சம் அனுப்பினார் என்று நினைத்துக் கொண்டிருந்த ஞானேஷ்வருக்கு, இது பேரிடியாக இருந்தது.

அது மட்டுமல்ல.. பிரதமர் மோடி கொடுத்ததாக நினைத்துக் கொண்டு ரூ.9 லட்சத்தை எடுத்து வீடு கட்டிவிட்ட ஞானேஷ்வர், மிச்சம் 6 லட்சத்தை மட்டும் வங்கிக்கே திரும்ப செலுத்திவிட்டார்.

செலவிட்டத் தொகையை எப்படி செலுத்துவது என்று தெரியாமல் ஞானேஷ்வரும், எப்படி வசூலிப்பது என்று தெரியாமல் வங்கி அதிகாரிகளும் திகைத்து நிற்கிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com