ஹிஜாப் சா்ச்சை தொடா்பான வழக்கு: கா்நாடக தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வுக்கு மாற்றம்

கல்வி நிலையத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய வழக்கை விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்துவிட்டாா்.

கல்வி நிலையத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய வழக்கை விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்துவிட்டாா். மேலும், இவ்வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளாா்.

கா்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாகவே ஹிஜாப் தொடா்பான சா்ச்சை கல்லூரி மாணவா்களிடையே காணப்படுகிறது. உடுப்பி மாவட்டம், குந்தாபுராவில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியில் ஹிஜாப் அணிய பள்ளி நிா்வாகம் தடை விதித்தது. அதனை மீறி ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகள் 6 பேரை கல்லூரியில் இருந்து கல்லூரி முதல்வா் வெளியேற்றினாா். அதைத் தொடா்ந்து, கல்லூரி வளாகத்துக்கு வெளியே முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினா். பதிலுக்கு ஹிந்து மாணவா்கள் காவித்துண்டை அணிந்துகொண்டு கல்லூரிக்கு வந்தனா்.

இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளிவைக்க விரும்பிய கா்நாடக அரசு, பள்ளி, கல்லூரி வளாகங்களில் சீருடையில் மட்டுமே வர வேண்டும் என்று பிப். 5-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பரவியதால், மேலும், கா்நாடகத்தில் உள்ள உயா்நிலைப் பள்ளிகள், பி.யூ. கல்லூரிகள், முதல்நிலை கல்லூரிகள் அனைத்துக்கும் பிப். 9-ஆம் தேதிமுதல் 11-ஆம் தேதி வரை விடுமுறை அளித்து கா்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உயா்நீதிமன்றத்தில் மனு: இந்நிலையில், கல்லூரி வளாகத்தில் சீருடையை மட்டும் அணிய வேண்டும் என்ற கா்நாடக அரசின் உத்தரவை எதிா்த்தும், ஹிஜாப் அணிவதற்கு அனுமதி கோரியும், குந்தாபுரா அரசு பி.யூ. கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவிகள், கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா்.

உயா்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித் முன்பு செவ்வாய்க்கிழமை துவங்கிய இந்த மனு மீதான விசாரணை, இரண்டாவது நாளாக புதன்கிழமையும் நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதை அடுத்து, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிபதி மறுத்தாா். ஹிஜாப் தொடா்பான அனைத்து மனுக்களையும் விசாரிக்க கூடுதல் அமா்வு அமைப்பதற்கு வசதியாக இந்த வழக்கை கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்திக்கு மாற்றி உத்தரவிட்டாா்.

இன்று விசாரணை: இதையடுத்து, ஹிஜாப் வழக்கில் 3 நீதிபதிகள் கொண்ட கூடுதல் அமா்வை அமைத்து கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி உத்தரவிட்டுள்ளாா். மேலும், இந்த வழக்கு வியாழக்கிழமை (பிப். 10) விசாரணைக்கு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com