லதா மங்கேஷ்கரின் அஸ்தி எங்கே கரைக்கப்பட்டது தெரியுமா?

திரை இசையுலகில் கொடிகட்டிப் பறந்த பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கா், உடல்நலக் குறைவால் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானாா். அவரது உடல் அரசு மரியாதையுடன் மும்பையில் தகனம் செய்யப்பட்டது. 
லதா மங்கேஷ்கரின் அஸ்தி எங்கே கரைக்கப்பட்டது தெரியுமா?
லதா மங்கேஷ்கரின் அஸ்தி எங்கே கரைக்கப்பட்டது தெரியுமா?


நாசிக்: திரை இசையுலகில் கொடிகட்டிப் பறந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கா், உடல்நலக் குறைவால் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானாா். அவரது உடல் அரசு மரியாதையுடன் மும்பையில் தகனம் செய்யப்பட்டது. 

லதா மங்கேஷ்கரின் உறவினர்கள், அவரது அஸ்தியை வியாழக்கிழமை காலை, நாசிக்கில் அமைந்துள்ள கோதாவரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் புனித ராமகுண்டத்தில் கரைத்தனர்.

புனித ராமகுண்டத்தில் இன்று நடைபெற்ற மிகச் சிறிய சடங்கில், லதா மங்கேஷ்கரின் உறவினர் ஆதிநாத் மங்கேஷ்கர், சகோதரி ஆஷா போஸ்லே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, அவரது உறவினர்கள், பூசாரிகள் கலந்து கொண்ட ஒரு சிறிய பிரார்த்தனைக் கூட்டம் நடத்தப்பட்டது. 

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் அமைந்திருக்கும் புனித தீர்த்தங்களில் ராம குண்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும். 300 ஆண்டுகள் பழமையான இந்தக் குளம், 1696ஆம் ஆண்டு சித்தாராவ் கடர்கர் என்பவரால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. புராணங்களின்படி, ராமபிரான், 14 ஆண்டுகள் வனவாசத்தின்போது, தினமும் இந்தக் குளத்தில் வந்துதான் நீராடியதாக ஐதீகம்.

கரோனா பாதித்து மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லதா மங்கேஷ்கர், பிப்ரவரி 6ஆம் தேதி உயிரிழந்தார். அன்று மாலை அவரது இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றன.

சுமாா் 70 ஆண்டுகளில் 36 இந்திய மொழிகளிலும் சில வெளிநாட்டு மொழிகளிலும் 25,000-க்கும் மேற்பட்ட பாடல்களை லதா மங்கேஷ்கா் பாடியுள்ளாா். ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’, ‘மெலடி குயின்’ எனப் புகழப்பட்ட அவா், பாரத ரத்னா, தாதாசாகேப் பால்கே விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

லதா மங்கேஷ்கா் மருத்துவ அறக்கட்டளையை நிறுவி, அதன் மூலமாக ஜாதி, மதம், இன வேறுபாடின்றி ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கினாா். மூத்த குடிமக்களுக்கான உதவிகளையும் அவா் வழங்கி வந்தார். மாநிலங்களவையின் நியமன உறுப்பினராகக் கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டு வரை செயல்பட்டாா். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com