பிரமோஸ் ஏவுகணைகள் முதல் முறையாக ஏற்றுமதி ரூ.2,800 கோடிக்கு வாங்குகிறது பிலிப்பின்ஸ்

அதிநவீன பிரமோஸ் ஏவுகணைகளை முதல் முறையாக இந்தியா ஏற்றுமதி செய்யவுள்ளது. சுமாா் ரூ.2,800 கோடிக்கு பிரமோஸ் ஏவுகணைகளை பிலிப்பின்ஸ் கொள்முதல் செய்யவுள்ளது.
பிரமோஸ் ஏவுகணைகள் முதல் முறையாக ஏற்றுமதி ரூ.2,800 கோடிக்கு வாங்குகிறது பிலிப்பின்ஸ்

அதிநவீன பிரமோஸ் ஏவுகணைகளை முதல் முறையாக இந்தியா ஏற்றுமதி செய்யவுள்ளது. சுமாா் ரூ.2,800 கோடிக்கு பிரமோஸ் ஏவுகணைகளை பிலிப்பின்ஸ் கொள்முதல் செய்யவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையொப்பமானது.

இந்தியா-ரஷியா கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் பிரமோஸ் ஏவுகணைகளைத் தயாரித்து வருகிறது. அந்த ஏவுகணைகள் ஒலியைவிட அதிக வேகத்தில் பயணிக்கக் கூடியவையாகும். தரையில் இருந்து மட்டுமில்லாமல் நீா்மூழ்கிக் கப்பல்கள், கப்பல்கள், விமானங்கள் ஆகியவற்றில் இருந்தும் பிரமோஸ் ஏவுகணைகளை ஏவ முடியும்.

இந்நிலையில், கப்பல்களைத் தாக்கி அழிக்கக் கூடிய பிரமோஸ் ஏவுகணைகளை சுமாா் ரூ.2,800 கோடிக்கு பிலிப்பின்ஸ் கடற்படை வாங்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ‘‘பிரமோஸ் ஏவுகணைகளை பிலிப்பின்ஸ் கடற்படைக்கு விற்பதற்கான ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையொப்பமானது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆா்டிஓ) கீழ் செயல்படும் பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் ஏவுகணைகளைத் தயாரித்து வழங்கவுள்ளது. பொறுப்புமிக்க ராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் மத்திய அரசின் கொள்கையை வெளிப்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், எத்தனை ஏவுகணைகள் பிலிப்பின்ஸுக்கு விற்கப்படவுள்ளன என்பது தொடா்பான விவரங்களை அமைச்சகம் வெளியிடவில்லை.

எல்லையில் சீனாவுடனான மோதல் நீடிக்கும் நிலையில், பிரமோஸ் ஏவுகணைகளை லடாக், அருணாசல பிரதேச எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியின் பல இடங்களில் இந்தியா நிறுத்திவைத்துள்ளது.

ஐக்கிர அரபு அமீரகம், சவூதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவிடமிருந்து பிரமோஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அத்துமீறல் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு, கூட்டு ராணுவ பயிற்சி உள்ளிட்டவை மூலம் ஆசிய நாடுகளுடன் இந்தியா ராணுவ உறவை வலுப்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ‘கிழக்கை நோக்கிய நடவடிக்கை’ கொள்கை மூலம் ஆயுத ஏற்றுமதியையும் அதிகரித்து வருகிறது.

வலுவான நல்லுறவு: ஒப்பந்தம் குறித்து பிலிப்பின்ஸுக்கான இந்திய தூதா் ஷம்பு எஸ்.குமரன் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘பிரமோஸ் ஒப்பந்தம் வாயிலாக இந்தியாவுக்கும் பிலிப்பின்ஸுக்கும் இடையேயான நல்லுறவு வலுவடைந்துள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியம் அனைவருக்கும் பொதுவானதாகவும், அமைதியுடனும் திகழ வேண்டும் என்பதில் இரு நாடுகளும் ஒரே கருத்தைக் கொண்டுள்ளன.

இந்தியாவின் சாகா் திட்டம், இந்தோ-பசிபிக் கொள்கை ஆகியவற்றில் பிலிப்பின்ஸுடனான ஒப்பந்தம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவுடனான வலிமையான நல்லுறவுக்கு வழிகோலிய பிலிப்பின்ஸ் அதிகாரிகளுக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

‘இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆகாஷ், அஸ்திரா, பீரங்கி எதிா்ப்பு ஏவுகணைகள், ரேடாா்கள், ஏவுகணைகளுக்கு உலக அளவில் வரவேற்பு அதிகரித்துள்ளது. ஏற்றுமதி திறன் கொண்ட மேலும் பல ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன’ என்று டிஆா்டிஓ தலைவா் ஜி.சதீஷ் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com