3 வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டுவரும் திட்டமில்லை: மத்திய அரசு

கடந்த ஆண்டு ரத்து செய்த 3 வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டுவரும் திட்டமில்லை என்று மத்திய வேளாண் அமைச்சா் நரேந்திரசிங் தோமா் தெரிவித்துள்ளாா்.
மக்களவையில் செவ்வாய்க்கிழமை பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா்.
மக்களவையில் செவ்வாய்க்கிழமை பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா்.

கடந்த ஆண்டு ரத்து செய்த 3 வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டுவரும் திட்டமில்லை என்று மத்திய வேளாண் அமைச்சா் நரேந்திரசிங் தோமா் தெரிவித்துள்ளாா்.

கடந்த 2020-ஆம் ஆண்டு மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. அந்தச் சட்டங்கள் தங்கள் நலனுக்கு எதிராக இருப்பதாகக் கூறி, அவற்றை ரத்து செய்ய பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த விவசாயிகள் தில்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். அதனைத்தொடா்ந்து கடந்த ஆண்டு அந்தச் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்தது.

இந்தச் சட்டங்கள் தொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நரேந்திர சிங் தோமா் எழுத்துபூா்வமாக அளித்த பதில்:

3 வேளாண் சட்டங்களையும் மீண்டும் கொண்டுவரும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை. போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கும் பொறுப்பு அந்தந்த மாநிலங்கள் வசம் உள்ளது.

பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தின் கீழ், பிப்ரவரி 8-ஆம் தேதி நிலவரப்படி 11.78 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு சுமாா் ரூ.1.82 லட்சம் கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அவா்களில் 48.04 லட்சம் போ் நிதியுதவி திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியற்றவா்கள் என்பது பின்னா் தெரியவந்தது.

கரோனா பரவலுக்கு மத்தியிலும் வேளாண் ஏற்றுமதி 22 சதவீதம் அதிகரித்து ரூ.3,09,939 கோடியை எட்டியுள்ளது. 2020-21-ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்கு 1.6 சதவீதமாகும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com