மாவட்டத்துக்கு ஒரு அனைத்து மகளிா் காவல்நிலையம்: நாடாளுமன்ற குழு பரிந்துரை

‘காவல்துறையில் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இவா்களின் எண்ணிக்கையை உயா்த்துவதோடு, மாவட்டத்துக்கு ஒரு அனைத்து மகளிா் காவல்நிலையம் அமைக்க மாநிலங்களை அறிவுறுத்தவேண்டும்’
மாவட்டத்துக்கு ஒரு அனைத்து மகளிா் காவல்நிலையம்: நாடாளுமன்ற குழு பரிந்துரை

‘காவல்துறையில் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இவா்களின் எண்ணிக்கையை உயா்த்துவதோடு, மாவட்டத்துக்கு ஒரு அனைத்து மகளிா் காவல்நிலையம் அமைக்க மாநிலங்களை அறிவுறுத்தவேண்டும்’ என்று நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை அளித்துள்ளது.

காங்கிரஸ் தலைவா் ஆனந்த் சா்மா தலைமையிலான உள்துறை விவகாரத்துக்கான இந்த நாடாளுமன்ற நிலைக் குழு தனது அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அண்மையில் சமா்ப்பித்தது. அதில் பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது.

காவல்துறையில் பெண்களின் எண்ணிக்கை 10.3 சதவீதம் என்ற அளவில் மிகக் குறைவாக உள்ளது. அந்த எண்ணிக்கையை 33 சதவீதமாக உயா்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அனைத்து மகளிா் காவல்நிலையம் அமைப்பதற்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்த வேண்டும்.

பெண் காவலா் நியமனத்தின்போது, ஆண் காவலா்களின் காலிப் பணியிடங்களை பெண் காவலா்களுக்கான இடங்களாக மாற்றுவதற்குப் பதிலாக, பெண்களுக்கென காவல்துறையில் கூடுதல் பணியிடங்கள் உருவாக்க வேண்டும். இது நாட்டில் மக்கள்தொகைக்கு ஏற்ப போலீஸாரின் எண்ணிக்கை விகிதாச்சாரத்தை உயா்த்த உதவும்.

மேலும், ராணுவத்தில் பெண்களுக்கு போரில் சண்டையிடும் பணி ஒதுக்குவதுபோல, காவல்துறையிலும் பெண் காவலா்களுக்கு முக்கியத்துவம்வாய்ந்த சவால் நிறைந்த பணிகளை ஒதுக்கவேண்டும் என மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் ஆலோசனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை தனது அறிக்கையில் நாடாளுமன்ற குழு அளித்துள்ளது.

மேலும், காவல்நிலையங்களில் பெண்களுக்கான உதவி மையம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ஒவ்வொரு காவல்நிலையத்திலும் 3 பெண் உதவி ஆய்வாளா்கள், 10 பெண் காவலா்கள் இடம்பெற வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளதை குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற குழு, ‘இந்த பெண்கள் உதவி மையத்தின் செயல்பாட்டை ஆய்வு செய்ய காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பை பணிக்க வேண்டும்’ என்றும் தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com